Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது; விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆகிறது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியின் சிங்கு எல்லையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு விவசாய சங்க தலைவர்கள் பேட்டியளித்தனர்.படம்: பிடிஐ

புதுடெல்லி

பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதால் டெல்லியில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்கங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளி யாகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்று கடந்த மாதம் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அவர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

எனினும் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உறுதி செய்து புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சுமார் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

இந்த சூழலில் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியின் சிங்கு எல்லையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ஹரிந்தர் சிங் கூறியதாவது:

விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வதில் இழுபறி நீடிக்கிறது. போராட்டத்தை வாபஸ் பெற்ற பிறகு வழக்குகளை ரத்து செய்வதாக மத்திய அரசு கூறுகிறது. எங்களைப் பொறுத்தவரை வழக்குகளை முதலில் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். எனவே டிசம்பர் 8-ம் தேதி (புதன்கிழமை) எங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

போராட்டத்தின்போது உயிரிழந்த சுமார் 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது. இதில் பஞ்சாப் அரசை பின்பற்ற வேண்டும். பஞ்சாப் அரசு சார்பில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படுகிறது. இதையே மத்திய அரசும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிகைத் கூறும்போது, "முதலில் போராட்டத்தை நிறுத்துங்கள். அதன்பிறகு வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு கூறுகிறது. இதை எப்படி நம்ப முடியும்? விவசாயிகளின் ஏராளமான டிராக்டர்கள் டெல்லி, ஹரியாணா, உத்தர பிரதேச போலீஸ் நிலையங்களில் சிக்கியுள்ளன. அவற்றை யார் மீட்டு கொடுப்பார்கள்? விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். டிராக்டர்களை விடுவிக்க வேண்டும். சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம். போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் சொந்த ஊருக்கு திரும்ப 8 நாட்கள் தேவைப்படும்" என்று தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாபை சேர்ந்த பல்வீர் ராஜேவால், உத்தர பிரதேசத்தை சேர்ந்த யத்வீர் சிங், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிவ குமார் காகா, மகாராஷ்டிராவை சேர்ந்த அசோக் தவாலே, ஹரியாணாவை சேர்ந்த குர்நாம் சாதுனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மின்சார திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும். வேளாண் கழிவுகள் எரிப்பு விவகாரத்தில் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. லக்கிம்பூர் கலவரத்தில் தொடர்புடைய மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இவை குறித்தும் விவசாயிகள் குழு மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தும்.

வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அவர்களை அகற்ற வேண்டும் என்று கோரி டெல்லி நொய்டாவை சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.எம். சுந்தரேஷ் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் கூறும்போது, “வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்று வரும் இடங்களில் தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளன. இதுதொடர்பாக முடிவெடுக்க அரசுக்கு கூடுதல் அவகாசம் தேவை. அந்த அவகாசத்தை நீதிமன்றம் வழங்க வேண்டும்" என்றார். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x