Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

சிவப்பு தொப்பி என்பது உ.பி.க்கு சிவப்பு எச்சரிக்கை: எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கிய பிரதமர் மோடி சமாஜ்வாதி குறித்து விமர்சனம்

சிவப்பு தொப்பி என்பது உத்தர பிரதேசத்துக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கையாகும் என்று சமாஜ்வாதி கட்சியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேசம் கோரக்பூரில் ரூ.10,000 கோடி மதிப்பிலான உரத் தொழிற்சாலை, எய்ம்ஸ் மற்றும் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம், பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புஎய்ம்ஸ் மருத்துவமனை, உரத்தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினேன். அந்த திட்டங்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுவெற்றிகரமாக நிறைவேற்றி யுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவதால் அரசு திட்டப் பணிகள் அதிவேகத்தில் நடைபெறுகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டில் நான் பிரதமராக பதவியேற்றபோது யூரியா தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக இருந்தது, இதற்காக 3 விதமான நடவடிக்கைகளை எடுத்தோம்.

முதலாவது தவறான யூரியா பயன்பாட்டை நிறுத்தினோம். 2-வது கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மண் சுகாதார அட்டைகளை வழங்கினோம். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் வயலுக்கு என்ன வகையான உரம் தேவை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. 3-வதாக யூரியா உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

மூடப்பட்ட உர ஆலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்தோம். இதன்படி கோரக்பூரில் உள்ள உர ஆலை உட்பட நாட்டின் 5 பெரிய உரத் தொழிற்சாலைகளை தேர்ந்தெடுத்தோம். இதில் கோரக்பூர் உர ஆலை செயல்பட தொடங்கிவிட்டது, மீதமுள்ள ஆலைகள் விரைவில் செயல்பட தொடங்கும்.

கோரக்பூர் உரத் தொழிற்சாலை மாநிலத்தின் விவசாயிகளுக்கு போதுமான யூரியாவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பூர்வாஞ்சலில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் சுய வேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.

கரோனா நெருக்கடியால் சர்வதேச வர்த்தக சேவை பாதிக்கப்பட்டது. விநியோக சங்கிலிகள் உடைந்தன. இதனால் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்தது. விவசாயிகள் மீது அதிக அக்கறை கொண்ட மத்திய அரசு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு யூரியா கிடைக்க நடவடிக்கை எடுத்தது.

சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இந்தநிலையை மாற்ற சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் வரைசெலவிடப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எத்தனால் மற்றும் உயிரி எரிபொருளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதன்மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்படும்.

கோரக்பூரில் நீண்ட காலமாக ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்தக் கல்லூரியில் இயங்கி வந்தஆராய்ச்சி மையத்துக்கு சொந்தகட்டடம் கூட இல்லை. தற்போதுஏழைகளுக்கு மருத்துவ சேவைவழங்க புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மாநில அரசின் தீவிர முயற்சியால் 7 மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் சுமார் 90% குறைந்திருக்கிறது.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியாவது இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள். எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகள் பெரிய நகரங்களுக்கு மட்டுமே என்று முன்பு கருதப்பட்டது. அதை மாற்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எய்ம்ஸ்மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசை பொறுத்தவரை 130 கோடி மக்களின் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

உ.பி.யில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் கோரக்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி சமாஜ்வாதி கட்சியை மறைமுகமாக விமர்சித்தார். சமாஜ்வாதி மரபின்படி அந்த கட்சியினர் சிவப்பு தொப்பி அணிகின்றனர். இதை வைத்து பிரதமர் மோடி பேசும்போது, "சிவப்பு தொப்பிகள் என்பது உத்தர பிரதேசத்துக்கு விடுக்கப்படும் சிவப்பு எச்சரிக்கையாகும். சிவப்பு தொப்பி அணிந்தவர்கள் மக்களை பற்றி கவலைப்படவில்லை. எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறார்கள். அவர்களின் கடந்த கால ஆட்சியில் ஊழல் புரையோடியது. தீவிரவாதிகள், சமூகவிரோதிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. மக்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டன. இதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x