

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுடன் அரசு வேலை வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் சார்பில் நடந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
ஆனால் வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு பதிலளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் “ வேளாண் போாரட்டத்தில் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை. அவ்வாறு உயிரிழந்ததாக அரசின் பதிவேட்டில் இல்லை’’ எனக் கூறினார்.
இந்நிலையில் மக்களவையில் இன்று இதுதொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகப் பேசிய பிரதமர் மோடியே தான் ஒரு தவறு இழைத்துவிட்டதாகக் கூறினார். நாடுமுழுவதும் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இப்போது விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக எதுவும் தெரியாது என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
பஞ்சாப் அரசு, 403 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் கொடுத்துள்ளது. அதேபோல் எங்களிடம் போராட்டத்தில் உயிரிழந்த வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 விவசாயிகளின் பட்டியல் உள்ளது. மீதமுள்ளவர்களையும் எளிதில் கண்டறிந்துவிடலாம்.
ஆனால், மத்திய அரசோ எந்த ஆவணமும் இல்லை எனக் கூறுகிறது. உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுடன் வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.