நாகாலாந்து படுகொலை, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: இன்று காலை வரை அவை ஒத்திவைப்பு

நாகாலாந்து படுகொலை, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: இன்று காலை வரை அவை ஒத்திவைப்பு
Updated on
1 min read

நாகாலாந்து படுகொலை, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாகாலாந்தில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களால் தவறு தலாக 14 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை முதலே மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுபகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

பகல் 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் அவையை நடத்திக் கொண்டிருந்தார். எம்.பி.க்களை தங்களது இருக்கைக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பவே அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

அவை 2 மணிக்கு கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் அவைமாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை 4 மணிக்கு மீண்டும் கூடியபோது அவையில் நாகாலாந்து விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் அவரைப் பேசவிடாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே தனது விளக்கத்தை அமைச்சர் அமித் ஷா எடுத்துக்கூறி உரையை நிறைவு செய்தார். அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பினர். இதனால் அவையை இன்று காலை வரை ஹரிவன்ஷ் நாராயண் ஒத்திவைத்தார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in