

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கடந்த 3-ம் தேதி டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செய்திருந்தது.
விழாவில் மேடைக்கு வர இயன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேடையிலேயே விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆனால் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து விருதுகளை வழங்கினார்.
இதுகுறித்து மாற்றுத் திறனாளி நீச்சல் வீரரான முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் கூறும்போது, “வீல்சேரில் வந்த மாற்றுத் திறனாளிகளை ஏற்றிச் செல்ல ஹைட்ராலிக்லிப்ட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டு இருந்தோம். ஆனாலும் நிகழ்ச்சிகள் அங்கு நடக்கவில்லை. இதற்காக மத்திய அமைச்சகத்தை நான் குறை கூறவில்லை. ஆனால் நாங்கள் மீண்டும் ஊனமுற்றவர்கள் என்று எங்களை உணர வைக்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இதுகுறித்து சமூக நீதித்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறும்போது, “மாற்றுத் திறனாளிகளுக்கு சங்கடமாக இருக்கக்கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரே கீழே இறங்கி வந்து விருதைத் தருவதாக தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஹைட்ராலிக் லிப்டில் கோளாறு ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் மிகப்பெரிய மனம் படைத்தவர்" என்றார்.
நேரடியாக மேடைக்குச் சென்று குடியரசுத் தலைவரிடம் விருது பெற முடியவில்லையே என்று சில மாற்றுத் திறனாளிகள் புகார் எழுப்பியுள்ளனர்.