Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளது - ‘பிசினஸ் லைன்’ செய்தியை மேற்கோள் காட்டி மோடி, நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பெருமிதம்

மாநிலங்கள் நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் மேற்கொண்ட மூலதன செலவு இரு மடங்கு அதிகரித்து ரூ.1.71 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மூலதன செலவு அதிகரித்துள்ளதை `பிசினஸ் லைன்' செய்தித்தாள் பட்டியலிட்டுள்ளது. இதை பிரதமர்மோடியும் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளதன் அறிகுறி என்று அவர்கள் கூறியுள்ளனர்.

முதல் காலாண்டில் மாநிலங்கள் செலவிட்ட மூலதன செலவுரூ.69,802 கோடியாக இருந்தது. அதிகம் செலவு செய்த மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் ரூ.23,803 கோடி செலவிட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதல்காலாண்டில் இம்மாநிலம் செலவிட்ட தொகை ரூ.9,734 கோடியாகும். இதற்கு அடுத்தபடியாக மத்தியப் பிரதேசம் ரூ.18,804 கோடியும், தெலங்கானா ரூ.15,078 கோடியும், கர்நாடகா ரூ.13,957 கோடியும், தமிழ்நாடு ரூ.11,402 கோடியும் செலவிட்டுள்ளன. மாநிலங்கள் வழக்கமாக செலவிடும் மூலதன செலவுத் தொகையை விட 2 முதல் 5 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) மகாராஷ்டிராவின் மூலதன செலவு கணிசமானது. இம்மாநிலத்தின் செலவுத் தொகை ரூ.8,713 கோடியாகும். முதல் காலாண்டில் இம்மாநிலம் செலவிட்ட தொகை ரூ.1,148 கோடி. தற்போது 8 மடங்கு அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா, ஹரியாணா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் பட்ஜெட் ஒதுக்கீட்டில் 40% முதல் 50% வரை 2-ம் காலாண்டில் செலவிட்டுள்ளன.

27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக செலவிட ஒதுக்கியுள்ள தொகை ரூ.6.41 லட்சம் கோடியாகும். செப்டம்பர் வரையான காலத்தில் இம்மாநிலங்கள் ரூ.1.71 லட்சம் கோடியை செலவிட்டுள்ளன. இதுபட்ஜெட் ஒதுக்கீட்டில் 27% ஆகும்.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்கள் பட்ஜெட் ஒதுக்கீட்டில் கால்பகுதி அளவைக்கூட நிறைவேற்றவில்லை. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மூலதன செலவுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டு தொகை ரூ.1.14 லட்சம் கோடி. இம்மாநிலம் இதுவரை 21 சதவீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளது. மகாராஷ்டிரா பட்ஜெட் ஒதுக்கீட்டில் 14 சதவீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளது. இம்மாநிலம் பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை ரூ.60,300 கோடியாகும்.

மத்திய, மாநில அரசுகள் மூலதன செலவுத் தொகையை செலவிட்டு வருவதாக தரச்சான்று நிறுவனமான கிரிசில் சுட்டிக் காட்டியுள்ளதோடு இதன் பயன் விரைவில் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலால்மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகுதிட்டச் செலவுகளை மேற்கொள்ளு மாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மூலதன செலவுகளை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு பல்வேறு ஊக்கச் சலுகைகளையும் மத்திய அரசு அளித்து வருகிறது. குறிப்பாக மாநிலங்கள் திட்டப் பணிகளை நிறைவேற்ற தேவையான கடன் வசதி, வட்டியில்லா கடன் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

மத்தியஅரசின் ஆத்மநிர்பாரத் திட்டத்துக்காக சிறப்பு சலுகையாக மாநிலங்களுக்கு மூலதன செலவுக்கு சிறப்பு நிதியை ஒதுக்கியது. இதன்படி ரூ.11,912 கோடி பலதிட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு, குடிநீர் விநியோகம், பாசனவசதி, மின்சாரம், போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாட்டு திட்டப் பணிகள் இதில் அடங்கும். அதேபோல மாநில அரசுகள் தங்களது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 0.5% வரை கடன் பெறவும் அனுமதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x