Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM

வரதட்சணையை ஒழிக்க சட்டங்களை கடுமையாக்குவதுடன் மக்களும் மனதளவில் மாற வேண்டும்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி

‘‘நாட்டில் இருந்து வரதட்சணை கொடுமையை ஒழிக்க சட்டத்தில் கடும் விதிமுறைகளை கொண்டு வரவேண்டும்’’ என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கேரளாவை சேர்ந்த சிலர் வரதட்சணை கொடுமையை முற்றிலும் ஒழிக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜு கூறியதாவது:

பயிற்சி வகுப்புகள்

வரதட்சணையின் தாக்கம் நாடுமுழுவதும் பரவலாக உள்ளது. அதிகம் படித்த கேரள மாநிலத் திலேயே வரதட்சணை கொடுமை நிலவுகிறது. தங்க நகைகளுக்காக இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினரே கொலை செய்கின்றனர். வரதட்சணை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எச்சரிக்கவும் திருமணத்துக்கு முன்பு மணமகன் - மணமகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். திருமணத்துக்கு முன்பு இந்தப் பயிற்சியை பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். பயிற்சி பெற்றால்தான் திருமணம் செல்லும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் வி.கே.பிஜு கூறினார்.

அதற்கு நீதிபதி சந்திரசூட், ‘‘கொச்சி போன்ற பெரு நகரங்கள் மட்டும் இந்தியா அல்ல.சிறு சிறு கிராமங்களும் உள்ளடங் கியதுதான் இந்தியா. நீங்கள் கூறுவது போல் கிராமங்களில் பயிற்சி வகுப்புகளை எப்படி நடத்த முடியும். கிராமங்களில் திருமணத்துக்கு முன்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்க முடியாமல் போனால், பின்விளைவுகள் பெரிதாக இருக்கும்’’ என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் நீதிபதி சந்திரசூட் தனது உத்தரவில் கூறியதாவது:

மறுபரிசீலனை

வரதட்சணை தடுப்பு சட்டம் 1961, குற்றவியல் சட்டங்கள் போன்ற கடுமையான சட்டங்கள் உள்ளன. தேசிய பெண்கள் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் வரதட்சணை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, வரதட்சணை தொடர்பான சட்டத்தை தேசிய சட்ட ஆணையம் மறுபரிசீலனை செய்து, அதில் இன்னும் கடுமையான திருத்தங்களை கொண்டு வரவேண்டும். தவிர மக்களும் மனதளவில் மாற வேண்டும். திருமணத்தின் அடிப்படை சமூக மதிப்பு குறித்த புரிதல் ஏற்பட வேண்டும். திருமணம் முடித்த இளம்பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இந்த விஷயங்களில் நீதிமன் றமே சட்டத் திருத்தங்களை கொண்டு வரமுடியாது. தற்போதுள்ள சட்டத்தில் உள்ள குறைகளை கண்டறிந்து, வரதட்சணையை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தேவையான கடுமையான விதிமுறைகளுடன் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை தேசிய சட்ட ஆணையம் விரைந்து செய்ய வேண்டும்.

மேலும், இந்த விஷயத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது குறித்துமனுதாரர்கள் தங்களது ஆய்வுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x