Last Updated : 07 Dec, 2021 03:06 AM

 

Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM

கர்நாடகாவில் 149 மாணவருக்கு கரோனா: பள்ளி கல்லூரிகளை மூடுவது குறித்து முதல்வர் ஆலோசனை

பெங்களூரு

கர்நாடகாவில் ஷிமோகா, சிக்கமக ளூரு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 149 மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி,கல்லூரிகள் கடந்த செப்டம்பரில் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் பெங்களூரு, மைசூரு, தார்வாட், தும்கூரு ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குகரோனா தொற்று கண்டறியப்பட் டது. இதனிடையே உருமாறிய டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடங்கியுள்ளதால் மாணவர்களும் பெற்றோரும் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சிக்கமகளூரு வில் உள்ள ஜவஹர் நவோதயா பள்ளியில் 27 மாணவர்களுக்கு நேற்று முன் தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து பரிசோதனையில் 27 பேருக்கும் கரோனா தொற்றுகண்டறியப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 418 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 107 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல ஷிமோகாவில் உள்ள நஞ்சப்பா நர்சிங் கல்லூரியில் பயிலும் 42 மாணவிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் அங்குள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நஞ்சப்பா நர்சிங் கல்லூரி இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது. மாணவிகளுடன் தொடர்பில் இருந்து 240 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறும்போது, “பள்ளி, கல்லூரிகளில் கரோனா பரவுவது துரதிஷ்டவசமானது. முக கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாட்டு பணிகளைமேற்கொள்ள உத்தரவிடப்பட் டுள்ளது. பள்ளி மாணவர்களின் பெற்றோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே வேளையில் கரோனாபரவல் அதிகரித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூட தயங்கவேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வித்துறை நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி அரசு செயல்பட்டு வருகிறது. கல்வி நிலையங்களை மூட நிபுணர் குழு வலியுறுத்தினால் அரசு அதுகுறித்து முடிவெடுக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x