

அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம், பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய இரு கட்சிகள் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணைப்புக்குப் பின் ஒருங்கிணைந்த கட்சியாக அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட இவை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐனதாவில் இருந்து உருவான 6 கட்சிகள் கடந்த 2014 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பிறகு ‘ஜனதா பரிவார்’ என்ற பெயரில் மீண்டும் இணைய முயன்றன. உ.பி.யின் சமாஜ்வாதி, சமாஜ்வாதி ஜனதா கட்சி, பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளம், ஹரியாணாவின் இந்திய தேசிய லோக் தளம் ஆகிய 6 கட்சிகள் இதில் இடம்பெற்றிருந்தன. பல்வேறு காரணங்களால் ஜனதா பரிவார் கட்சிகள் இணைய முடியாமல் போனது.
என்றாலும் பிஹார் முதல்வரான நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளத்துடன் அஜீத் சிங், பாபுலால் மராண்டி ஆகியோரின் கட்சிகளை இணைப்பது குறித்து பேசி வந்தார். இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை அஜீத்சிங், மராண்டி ஆகியோருடன் ஐக்கிய ஜனதா மூத்த தலைவர்கள் நேற்று நடத்தியதாக தெரிய வந்துள்ளது. முன்னதாக இரு கட்சித் தலைவர்களையும் நிதிஷ் குமார் கடந்த வாரம் டெல்லியில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி விட்டார். எனவே ஐக்கிய ஜனதா தளத்துடன் இருவரின் கட்சிகள் இணைவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஐக்கிய ஜனதா தள தேசிய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறும்போது, “மராண்டி மற்றும் அஜீத்சிங்குடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளால் நல்ல முடிவு ஏற்படப் போகிறது. நிதிஷ்குமார் நம் நாட்டின் முன் மாதிரி தலைவராக உருவாகியுள்ளார். நிதிஷுக்கு கிடைத்து வரும் அங்கீகாரத்தால் அவரது புகழ் வளர்ந்து வருகிறது. பாரதிய ஜனதாவின் வளர்ச்சியை தடுக்கும் ஒரே சக்தியாக எங்கள் கட்சி உள்ளது” என்றார்.
ஒருங்ணைந்த பின் கூடுதல் பலம் பெறவிருக்கும் ஐக்கிய ஜனதா தளம், அசாம், மேற்கு வங்கம், கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இதில் கேரளாவில் 9 தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளம் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் அசாமில் 8, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சேரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
உ.பி.யில் ஜாட் சமூகத்தினர் ஆதரவுடன் அரசியல் செய்து வரும் அஜீத்சிங், முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் மகன் ஆவார். பாஜக தலைமையிலான மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிகளில் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். ஜார்கண்டின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரான பாபுலால் மராண்டி, பாஜக சார்பில் அம்மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.