Last Updated : 29 Mar, 2016 07:55 AM

 

Published : 29 Mar 2016 07:55 AM
Last Updated : 29 Mar 2016 07:55 AM

பதான்கோட் தாக்குதல் விவகாரம்: என்ஐஏ அதிகாரிகளுடன் பாக். விசாரணை குழு ஆலோசனை

பதான்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதல் விசாரணை தொடர்பாக இந்தியா பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் புகுந்து கடந்த ஜனவரி 2-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 80 மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். எனினும் பாதுகாப்பு படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.

பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பாகிஸ்தான் முன்வந்தது. இதற்காக பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் முகமது தாஹிர் ராய் தலைமையில் 5 பேர் கொண்ட கூட்டு விசாரணை குழுவினரை பாகிஸ்தான் நியமித்தது. ஞாயிறன்று டெல்லி வந்தடைந்த இக்குழுவினரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து பதான்கோட் தாக்குதல் விசாரணை தொடர்பாக கலந்தாலோசிக்க கூட்டு விசாரணை குழுவினர் நேற்று என்ஐஏ தலைமையகத்துக்கு வந்தனர்.

பின்னர் இரு தரப்பினரும் இதுவரை நடந்த விசாரணை குறித்து ஆலோசித்தனர். அப்போது தாக்குதல் சம்பவம் தொடர்பாக சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் குழுவினரிடம் என்ஐஏ அதிகாரிகள் சமர்பித்தனர்.

இதையடுத்து, தனி விமானம் மூலம் என்ஐஏ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் விசாரணை குழுவினர் இன்று பதான்கோட் விமானப்படை தளத்துக்கு சென்று தங்களது விசாரணையை தொடங்கவுள்ளனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடந்த பகுதிகளை அவர்கள் பார்வையிடுகின்றனர்.

அதே சமயம் விமானப்படை தளத்துக்குள் அமைந்துள்ள முக் கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பாகிஸ்தான் விசாரணை குழுவின் பார்வையில் படாமல் இருப்பதற் காக திரை மறைப்புகள் மூலம் மறைக்கப் பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் குழுவினரின் இந் திய சுற்றுப்பயணத்தை தொடர்ந்து பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படை யில், விரைவில் இந்திய விசாரணை குழுவினரும், இஸ்லாமாபாத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங். கேள்வி

பாகிஸ்தான் விசாரணை குழுவை இந்தியாவுக்குள் அனுமதித்தது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடந்த விமானப்படை தளத்துக்குள் யாரை அனுமதிப்பது என்பதை என்ஐஏ அதிகாரிகள்தான் முடிவு செய்வர் என ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x