Published : 06 Dec 2021 07:33 PM
Last Updated : 06 Dec 2021 07:33 PM

ஒமைக்ரானால் இந்தியாவில் பிப்ரவரியில் 3வது அலை ஏற்படலாம்; 2வது அலையைவிட மிதமானதாக இருக்கும் ஐஐடி விஞ்ஞானி

ஒமைக்ரானால் இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்படலாம். ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும் என ஐஐடி விஞ்ஞானி மனீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றின் போக்கை கணித ரீதியில் கணித்துச் சொல்லும் நிபுனர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார் ஐஐடி பேராசிரியர் மனீந்திர அகர்வால்.

இவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:

ஒமைக்ரானால் இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை ஏற்படலாம். ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும். அன்றாடம் ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம். இதுவரை உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது ஒமைக்ரான், டெல்டார் திரிபை போல் பாதிப்பை ஏற்படவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவும் வேகம் கணக்கில் கொள்ளப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இதுவரை மருத்துவமனையில் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படும் சூழல் உருவாகிறது என்ற புள்ளிவிவரம் கிடைக்கும் போதே நிலைமை தெளிவாகப் புலப்படும். இப்போதைக்கு ஒமைக்ரான் பரவும் தன்மை அதிகம் ஆனால் அதன் தாக்கம் டெல்டாவை ஒப்பிடும்போது அதிகமில்லை.

டெல்டா பரவலின்போது கடைபிடிக்கப்பட்டது போல், இரவு நேர ஊரடங்கு போல் மிதமான ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது ஆகியனவற்றைக் கடைபிடித்தால் பரவல் உச்சம் தொடுவதைத் தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அறிவியல் தொழில்நுட்ப துறையானது சூத்திரா மாடலின் படி வெளியிட்ட கணிப்பில் இந்தியாவில் அக்டோபரில் மூன்றாவது அலை ஏற்படும் எனக் கூறப்பட்டது.

கடந்த 26 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் ஒமைக்ரானை கவலைக்குரிய திரிபு எனப் பட்டியலிட்டது.

இதன் பரவும் தன்மை அதிகரித்து வருகிறது. ஆனால் இது தீவிர பாதிப்பு, உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறதா என்பது இதுவரை உறுதியாகவில்லை. அதேபோல் தடுப்பூசி ஆற்றலை எதிர்க்குமா என்பதும் உறுதியாகவில்லை. அடுத்த இரண்டு வாரங்களில் கூடுதல் தகவல்களை எதிர்பார்ப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 10 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x