Published : 06 Dec 2021 06:37 PM
Last Updated : 06 Dec 2021 06:37 PM

நாகாலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை: ஆயுதப்படைச் சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

சித்தரிப்புப் படம்.

நாகாலாந்து மாநிலத்தில் 14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து எல்லைப்பகுதிகளில் மக்கள் வாழும் பகுதிகளில் அமலில் உள்ள ஆயுதப்படைச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி எதிர்ப்பு வலுத்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு (டிசம்பர் 4), நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மோன் மாவட்டத்தையொட்டிய கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்புப் படையினர் அப்பாவி மக்களை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பலியான பொதுமக்களின் இறுதிச்சடங்கு மோன் மாவட்டத்தில் உள்ள ஓட்டிங்கில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பிறகு அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகாலாந்தில் இருந்து ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்று நான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன், ஏனெனில் இந்தச் சட்டம் நாட்டின் பிம்பத்தில் ஒரு கரும்புள்ளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து முதல்வரின் வலியுறுத்தலைத் தொடர்ந்து மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்க என ஒற்றைவரியில் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து வலைதள பயனர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பதிவுகளில் ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஒரு பயனர் தனது கருத்தில் ''இப்போது காஷ்மீர் மக்களின் வலி தெரிகிறதா'' என எழுதியுள்ளார்.

மேகாலயா முதல்வர் சங்மா

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் மூலம் ஆஃப்ஸ்பா (AFSPA) எனப்படும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் இப்போது கேள்விக்குறியாகி இருப்பதாக மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தனது கடமையைச் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவறிவிட்டார் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூறியது.

இதுகுறித்து எம்.பி.யும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான சுஷ்மிதா தேவ் கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு கூறியதாவது:

எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை அதிகரிக்கப்போவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது மாநிலத்தின் அதிகாரத்தையில் தலையிடுவதாகவே முடியும்.

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷ்மிதா தேவ் எம்.பி.


நாகாலாந்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்று கூறி நடந்துள்ள கொலைகள், மாநிலத்தின் அதிகார வரம்பில் மத்திய அரசு தலையிட்டால், விஷயங்கள் எவ்வாறு தவறாகும் என்பதை நிரூபித்துள்ளது.

இந்த நாட்டில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) சரியாக செயல்படுகிறதா இல்லையா என்பதைக் கண்காணிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டியது அவசியம். பாதுகாப்புப் படையினரால் நாகாலாந்து பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் சட்டத்தின் மீதே கேள்வியை எழுப்பிஉள்ளது.

எனவே இத்தகைய தருணத்தில் மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் ஆதிக்கம் மற்றும் தலையீடு மூலம் அல்லாமல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக வடகிழக்கு மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும். ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (AFSPA) தொடர்பான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

இந்த நாட்டின் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முற்றிலும் தவறிவிட்டார்.

இவ்வாறு சுஷ்மிதா தேவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x