

நாகாலாந்தில் நடந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு (டிசம்பர் 4), நாகாலாந்தில் மியான்மர் எல்லையருகே உள்ள மோன் மாவட்டத்தையொட்டிய கிராமத்தில் நாகா தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் சோதனையில் மேற்கொண்டனர். இந்நேரத்தில் பணியில் இருந்த வீரர்களுக்கும் ஒரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில் பொதுமக்கள் 6 பலியாகினர். இவர்கள் அனைவரும் 15 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்த கூலித் தொழிலாளர்கள் ஆவார்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஊருக்கு வந்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்கள். தங்களது கிராமங்களுக்கு செல்ல காத்திருந்த போதுதான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டமக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என உள்துறை அமித்ஷா தெரிவித்தார். இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் அமித் ஷா நாகாலாந்து விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மோன் ஓட்டிங் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், 21 கமாண்டோக்கள் சந்தேகத்திற்கிடமான பகுதியில் பதுங்கியிருந்தனர். ஒரு வாகனம் அங்கு வந்தவுடன், அதை நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்டது.
ஆனால் அது வேகமாக ஓடத் தொடங்கியது. அந்த வாகனம் தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரில் 6 பேர் கொல்லப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகம் சம்பவத்தையும், அங்கு நடைபெறும் மாற்றங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அங்கு மக்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாகாலாந்து அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
நடந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.