Published : 06 Dec 2021 10:56 AM
Last Updated : 06 Dec 2021 10:56 AM

புதிய கட்சி தொடங்குவாரா?- காங்கிரஸுக்கு அதிர்ச்சியளித்த குலாம் நபி ஆசாத் 

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் | கோப்புப்படம்

புதுடெல்லி

புதிய கட்சி தொடங்குவது இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கூற முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என மட்டும் தெரிவித்துள்ள குலாம் நபி ஆசாத் எதிர்காலத்தில் தொடங்கமாட்டேன் எனக் கூறவில்லை. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஒரு புள்ளி வைத்துள்ளது நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு கலக்கமாகவே இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை விரைவாக மத்திய அரசு வழங்கும்பட்சத்தில் குலாம் நபி ஆசாத் புதிய கட்சி குறித்து யோசிக்கலாம். அதற்கான முன்னோட்டமாகவோ தற்போது காஷ்மீர் முழுவதும் பயணம் செய்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு நிலையான, வலுவான தலைமை வேண்டும் எனக் கோரி 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். அந்த குழுவில் முக்கியமானவராக இருப்பவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் குழுவிலிருந்தும் சமீபத்தில் நீக்கப்பட்ட குலாம் நபி ஆசாத்துக்கு எம்.பி.பதவி முடிந்தபின் மீண்டும் பதவி வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆசாத், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், 370 பிரிவு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கோரி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பேரணிகள், பிரச்சாரக் கூட்டங்களை குலாம்நபி ஆசாத் நடத்தி வருவதால், எதிர்காலத்தில் தனிக்கட்சி தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்தது.

பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைமைக்கும் ஏற்பட்ட மோதல் மற்றும் மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். தற்போது பஞ்சாப் மக்கள் கட்சி என்று தொடங்கிய அமரிந்தர் சிங் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி சேர்வது குறித்தும் ஆலோசித்து வருகிறார்.

இந்தசூழலில் குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இருக்கிறதா என்று தனியார் சேனல் நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு குலாம் நபி ஆசாத் கூறுகையில் “ இப்போதைக்கு நான் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. ஆனால் அரசியலில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கூற முடியாது. எப்போது இறப்போம் என்றுகூட யாருக்கும் தெரியாது.

இப்போதுள்ள காங்கிரஸில் தலைமைக்கு எதிராக யாரும் பேசமுடியவில்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்திஇருந்தபோது ஏதேனும் தவறு நடந்தால் அது தொடர்பாக கேள்வி எழுப்ப எனக்கு அதிகமான சுதந்திரத்தை வழங்கியிருந்தார்கள். விமர்சனங்களைப் பற்றி ஒருபோதும் அவர்கள் கவலைப்பட்டதில்லை. விமர்சனங்களை குற்றமாகப் பார்த்ததும் இல்லை. ஆனால், இன்றுள்ள தலைமை விமர்சித்தாலே குற்றமாகப்பார்க்கிறது. யாரையும் குறிப்பிடவில்லை.

ராஜீவ் காந்தி அரசியலில் இணைந்தபோது, என்னையும், ராஜீவ் காந்தியையும் அழைத்த இந்திரா காந்தி, என்னிடம் இல்லை, முடியாது என்றுகூடஎன்னிடம் சொல்லலாம். ஆனால், இல்லை என்று சொல்வது ஒழுக்கக்குறைவோ அல்லது மரியாதைக் குறைவோ அல்ல அது கட்சிக்கு நல்லதுதான். இன்று இல்லை என்ற வார்த்தையை கேட்க யாரும் தயராக இல்லை. இல்லை என்று சொன்னதற்காக, இன்று நீங்கள் இல்லாமல் போய்விட்டீர்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x