Last Updated : 13 Mar, 2016 11:59 AM

 

Published : 13 Mar 2016 11:59 AM
Last Updated : 13 Mar 2016 11:59 AM

கேரள சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் போட்டி: 70 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

கேரளாவில் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் நேற்று அறிவித்தது.

கட்சியின் மாநிலத் தலைவர் மனோஜ் சங்கரநல்லுர் நேற்று கொச்சியில் இந்தப் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது அவர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “கேரளாவின் 140 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடும். எஞ்சிய 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் ஒப்புதலுடன் விரைவில் வெளியிடப்படும்.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் மம்தா பங்கேற்க உள்ளார்.

எங்கள் கட்சிக்கு கேரளாவில் 2 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை தவிர கேரளாவில் பணிபுரியும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்காளிகளின் ஆதரவையும் கோருவோம். 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் முடிவை மாற்றக்கூடிய சக்தியாக திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. ஒருவேளை தற்போதைய தேர்தலில் நாங்கள் வெற்றிபெற முடியாவிட்டாலும் அடுத்த 5 ஆண்டுகளில் வலுவான சக்தியாக உருவெடுப்போம்” என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி உருவாகியுள்ளது. கேரளாவுக்கு சென்று இந்தப் புனிதமற்ற கூட்டணியை மக்களி டம் வெளிப்படுத்துவேன்” என்றார்.

இந்நிலையில் கேரளாவில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் 70 தொகுதிகளுக்கான வேட் பாளர் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் முக்கிய எதிர்கட்சியான இடது சாரி கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜகவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஓர் அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் மம்தாவும் 70 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x