

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்க கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் குறித்து யாரும் பதற்றப்படத் தேவையில்லை.இது மோசமான உயிர்கொல்லை வைரஸ் இல்லை, அறிகுறிகளும் தீவிரமாக இல்லாத பட்சத்தில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சமாளிக்கலாம் என்று ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்த தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படாத நிலையில் இந்தத் தகவலை அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருசமீபத்தில் இருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டனர். அதில் 66வயதானவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர். அவர் பெங்களூரு வந்து அங்கிருந்தபடியே துபாய்க்கு சென்றுவிட்டார். மற்றொருவர் 46 வயதான அரசு மருத்துவர், அந்த மருத்துவர் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சிகிச்சையில் இருந்து குணமடைந்தபின் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தி இந்துவுக்கு(ஆங்கிலம்) ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்ட மருத்துவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன். எனக்கு மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது. ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் கண்காணிப்பில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டே சமாளிக்கலாம்.
கரோனா அறிகுறிகள் எனக்கு வந்தபின் கடந்த 13 நாட்களாக உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய அளவுக்கு எந்தவிதமான பாதிப்பையும், தீவிரத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை. நான் தற்போது முழுமையாக நலமாக இருக்கிறேன். மக்கள் ஒமைக்ரான் வைரஸ் குறித்து பதற்றமோ அச்சமோ படத்தேவையில்லை. டெல்டா வகை வைரஸைப் பார்த்து, அனுபவப்பட்டுவிட்டதால், புதியவகை ஒமைக்ரான் வைரஸால் எந்தக் குழப்பமும் இல்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மக்கள் தங்களுடைய கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கைவிடக்கூடாது. ஏதாவது அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
எனக்கு நுரையீரல் தொடர்பான எந்தத் தொந்தரவும இல்லை. சுவை உணர்வு, வாசனை உணர்வு அற்றுப்போகவில்லை. என்னுடைய பரிசோதனை முடிவுகளைப் பார்த்தபின் நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன்
தொடர்ந்து 3 நாட்களாக பாரசிட்டமால் மாத்திரை, மல்ட்டிவைட்டமின், ஆன்ட்டிபோடிக்ஸ் மருந்துகளை எடுத்துக்கொண்டதால் சமாளிக்க முடிந்தது. என்னுடைய ஆக்சிஜன் அளவும் குறையவில்லை, நாடித்துடிப்பு சீராக இருந்தது, காய்ச்சல் இருந்தாலும் நாளாக படிப்படியாகக் குறைந்தது.
ஆனால், நவம்பர் 25ம் தேதி காலையில் திடீரென லேசான ரத்த அழுத்தக் குறைவு இருப்பதாக உணர்ந்தேன், லேசான மயக்கம் இருப்பதாக உணர்ந்தேன். ஆக்சிஜன் அளவு லேசாகக் குறைவதாக உணர்ந்தேன். அதனால்தான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்.
மருத்துவமனையில் உயர்தொழில்நுட்ப ஸ்கேன் செய்ததில் என்னுடைய நுரையீரலில் சிறிய அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு வழக்கமாக ஏற்படும் பாதிப்புதான். கடந்தமாதம் 25்ம்தேதி மோனோகுளோனல் ஆன்ட்டிபாடி மருந்துகள் எடுத்துக்கொண்டேன், அடுத்த நாள் சரியாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால், என்னுடைய சிகிச்சைமுறைகள் உதவி செய்ததா அல்லது நான் இயல்பாக குணமடைந்ததேனா எனத் தெரியாது”
இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார்.
மருத்துவரின் மனைவியும் மருத்துவர், இவர்களின் இரு மகள்களும் லேடி கர்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் லேசான காய்ச்சல், உடல்வலி மட்டுமே இருந்தது எனத் தெரிவி்த்தார்கள்.