

ஜோவத் புயலை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ஆய்வு செய்தார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருகிறது. ஜோவத் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், இன்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தின் புரியில் கரையை கடக்கவுள்ளது.
இதனிடையே, இந்தப் புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இருந்தபோதிலும், அது கரையை கடக்கும் சமயத்தில் பலத்த காற்றும், கனமழையும் பெய்யக் கூடும் என்பதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிசா அரசு எடுத்து வருகிறது. புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களை, பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து தங்க வைத்து வருகின்றனர்.
பேரிடர் மேலாண்மைக்கான தயார்நிலையை பிரதமர் நேரடியாக ஆய்வு செய்ததோடு, மாநில அரசுகள், தொழில்துறை மற்றும் அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து உயிர் மற்றும் உடைமைகளுக்கு குறைந்தபட்ச சேதம் ஏற்படுவதை உறுதிசெய்ய பல்வேறு அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக, ஜோவத் புயலை எதிர்கொள்ள ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளின் ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி மூலம் ஆய்வு செய்தார்.
சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தேசிய அளவிலான தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநில அரசுகள் செய்து வரும் ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அமைச்சகங்கள், அரசுகள், தொழில் அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளால் செய்யப்பட்ட வெற்றிகரமான பரிந்துரைகளையும் மதிப்பாய்வு செய்த அவர், சூறாவளியை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பாராட்டினார்.
இந்த ஒத்துழைப்பு கூட்டாட்சியின் சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார். அனைத்து பங்குதாரர்களின் உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளை இணைத்து, இந்த இயற்கை பேரிடரை மிகவும் சிறப்பான முறையில் எதிர்கொள்வதற்கான விரிவான செயல்திட்டத்தின் அவசியத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.