நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவரில்லை; தேசியவாதிகளுக்கு பிரச்சாரம் செய்வேன்: கங்கனா ரனாவத் சூசகம்

மதுரா நகருக்கு வந்த நடிகை கங்கனா ரனாவத் பேட்டியளித்த காட்சி
மதுரா நகருக்கு வந்த நடிகை கங்கனா ரனாவத் பேட்டியளித்த காட்சி
Updated on
1 min read


நான் எந்தக் கட்சியையும் சாராதவர். ஆனால், தேசியவாதிகளுக்கு மட்டும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாக தடாலடியாக கூறும் கருத்துகள் சர்ச்சையில் முடிகின்றன. இதற்கு அவர் மன்னிப்புக் கேட்பதும், ட்விட்டரில் பதிவை நீக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில் 1947ம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றது வெறும் பிச்சை என்று பேசினார், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான்கள் என்று விமர்சித்ததார். வேளாண் போராட்டத்தில் பங்கேற்ற முதாட்டியை நூறு ரூபாய்க்காக போராட வந்தவர் என்று கங்கானா விமர்சித்தார்.

இந்நிலையில் தனது குடும்பத்தில் நடந்த நிகழ்வுக்காக பஞ்சாப் மாநிலம் வந்த போது அவரது காரை விவசாயிகள் மறித்தனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கங்கனா ரனாவத் அந்த பெண்களிடம் பேசினார். விவசாயிகள் மற்றும் பெண் போராட்டக்காரர்களைப் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை, விளக்கம் அளித்து மன்னிப்புக் கேட்ட பின்பே அவரது காரை அங்கிருந்து செல்ல போராட்டக்காரர்கள் அனுமதித்தனர்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகருக்கு நேற்று சென்றார். அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மஸ்தானத்தில் வழிபாடு செய்தபின், கங்கனா ரனாவத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் 2022ம் ஆண்டு உ.பி. தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கங்கனா ரனாவத் “ நான் எந்தக் கட்சியையும் சாராதவர். ஆனால், யார் தேசியவாதிகளோ அவர்களுக்காக நான் பிரச்சாரம் செய்வேன். மக்கள் கிருஷ்ணரின் உண்மையான ஜென்மஸ்தானத்தைக் காண முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புகிறேன்” என பதில் அளித்தார்.

கிருஷ்ணர் பிறந்த ஜென்மஸ்தானத்தின் அருகே ஒரு மசூதி இருக்கிறது. அதை அகற்றுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அதை மறைமுகமாக நடிகை கங்கனா குறிப்பிட்டார்

மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை நீங்கள் கூறுகிறீரக்ளே என்று கேட்டபோது அதற்கு கங்கனா ரனாவத், “நான் பேசுவது சரியானதென்று, யார் நேர்மையானவர்களோ, துணிச்சலானவர்களோ, தேசியவாதிகளோ தேசத்தைப் பற்றி பேசுபவர்களோ அவர்களுக்குத் தெரியும். விவசாயிகளும், பெண்களும் எனது காரை மறித்தது உண்மைதான். ஆனால், அதற்காக அவர்களிடம் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கவில்லை. நான் அவர்களின் செயல்பாட்டை எதிர்த்தேன்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in