

புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், 3-ம் தவணை கரோனா தடுப்பூசி தேவையா என்பது குறித்து ஆய்வு நடத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
உலகம் முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனா 2-வது அலையின்போது மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே 3-வது அலை பரவலை தடுக்க மத்திய அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்.சுகாதார துறை உட்கட்டமைப் புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.64,179 கோடியை பயன்படுத்தி நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பு களை வலுப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கை வசதியை அதிகரிக்க வேண்டும். தடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். அத்தியாவசிய மருந்துகளை போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் கரோனா முதல் அலையின்போது நகரங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது. இதைத் தொடர்ந்து நகரங்களில் பரிசோதனை வசதி அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக கரோனா 2-வது அலையின்போது நகரங்களில் கரோனா வைரஸ் பரவல் குறைந்தது. சிறிய நகரங்கள், கிராமங்களில் வைரஸ் அதிவேகமாகப் பரவியது. எனவே நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் பரிசோதனை வசதியை மேம்படுத்த வேண்டும். கரோனா வைரஸின் மரபணுவை கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் வைரஸ் பரவலை தடுக்க முடியும். கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். புதிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கினால் கூடுதல் தடுப்பூசிகள் கிடைக்கும். இதன்மூலம் தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த முடியும்.
புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான் குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். குறிப்பாக இந்த வைரஸை எதிர்ப்பதில் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பலன் அளிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 3-ம் தவணை தடுப்பூசி தேவையா என்பது குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும். ஒமைக்ரான் வைரஸை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகரித்து, பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிடிஐ