Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

உத்தராகண்டில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கினார் மோடி: டெல்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்துக்கு அடிக்கல்

உத்தரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், உத்தராகண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் டெல்லி-டேராடூன் இடையிலான பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு டேராடூனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு முழுவதும் சுமார் ரூ.100 லட்சம் கோடி முதலீட்டில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உத்தராகண்ட் மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மேற்கொண்டு ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்லி-டேராடூன் இடையிலான பொருளாதார வழித்தடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.8,300 கோடி மதிப்பிலான இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால் டேராடூன்-டெல்லி இடையிலான பயண நேரம் 6 மணியிலிருந்து சுமார் 3 மணி நேரமாகக் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹரித்வார், முசாபர்நகர், ஷாம்லி, யமுனாநகர், பாக்பத், மீரட் மற்றும் பரவுத் ஆகிய 7 முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமையும். இந்த வழித்தடத்தில், வனவிலங்குகளின் நடமாட்டம் பாதிக்கப்படாத வகையில் ஆசியாவின் மிகப்பெரிய வனப்பகுதி உயர்மட்ட பாலமும் (12 கி.மீ.) 340 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும் அமையும்.

டேராடூன்-பான்டா சாஹிப் (இமாச்சல பிரதேசம்) இடையிலான சாலை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன் திட்ட மதிப்பு ரூ.1,700 கோடி ஆகும். இந்த திட்டத்தால் மேற்கண்ட இரு பகுதிகளுக்கு இடையிலான பயண நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாவை ஊக்குவிப்பதாக இந்த சாலை அமையும்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x