Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் அமைதி, முதலீடுகள் அதிகரிப்பு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

காஷ்மீரில் அமைதி நிலவி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

2019-ம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது. அங்கு தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிகரித்துள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை 2019-ம் ஆண்டு ரத்து செய்ததன் மூலம், யாராலும் நம்பமுடியாத விஷயத்தை பிரதமர் மோடி அங்கு நிகழ்த்தியுள்ளார். காஷ்மீர் தற்போது, இந்தியாவுடன் ஒருங்கிணைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

கரோனா இரண்டாவது அலையின் போது, பிரதமர் மோடி சரியான முறையில் வளங்களை பயன்படுத்தி ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினையை வெற்றிகரமாக எதிர்கொண்டு தீர்வு கண்டார்.

பாகிஸ்தானால் வரும் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்களுக்கு இந்தியா, துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) போன்ற அணுகுமுறைகள் மூலம் சரியான பதிலடியை கொடுத்தது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற தாக்குதல்களை நடத்திக் காட்டியுள்ளன. தற்போது இந்தியாவும் அதை செய்துகாட்டி உள்ளது.

அனைவருடனும் அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. எல்லை பாதுகாப்பு என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக வலிமையான , உறுதியான செய்தியை நாம் அளித்துள்ளோம்.

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டில் நீண்ட காலமாக கூட்டணி அரசுகளின் சகாப்தம் இருந்து வந்தது. 2014-ம் ஆண்டுக்கு பின் தான் மத்திய அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. அதனால், பிரதமர் அலுவலகம் எந்த கொள்கையிலும் சமரசம் செய்து கொள்ளாமல் நடவடிக்கை எடுக்க முடிந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகள் பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தரும் மசோதாவை (எம்எஸ்பி) தாக்கல் செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில் டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று முடிந்தால் போராட்டத்தை நிறுத்திக் கொள்ளத் தயார் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) விவசாய சங்க பிரதிநிதிகள், அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட விவசாய சங்கப் பிரதி நிதிகள் கமிட்டியையும் எஸ்கேஎம் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

5 பேர் கொண்ட கமிட்டி

இதுகுறித்து விவசாயச் சங்கத் தலைவர்களில் ஒருவரான யுதவீர் சிங் கூறும்போது, “நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் அழைத்து போராட்டத்தை வாபஸ் பெறுமாறுஅறிவுறுத்தினார். மேலும் அரசுடன் பேச்சு நடத்த கமிட்டியையும் உருவாக்குமாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.

அந்தக் கமிட்டியுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை குறித்து டிசம்பர் 7-ம் தேதி விவாதிக்கப்படும். அதில் சுமூக மான முடிவு எட்டப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x