

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அரசின் செயல்பாடுகள் குறித்து அவரது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி. ரகுராம் கிருஷ்ணம்ம ராஜு, மத்திய அரசுக்கு சமீபத்தில் ஓர் கடிதம் எழுதியிருந்தார். அதில், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆந்திராவில் ஜெகனண்ணா எனும் பெயர் வரும்படி முதல்வர் ஜெகன் செயல்படுகிறார் எனஆதாரங்களுடன் புகார் தெரிவித் திருந்தார்.
இக்கடிதத்துக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அனுப்பிய பதில் கடிதத்தில், ‘‘மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் வேறு பெயர் வைக்க கூடாது. அதே பெயரில்தான் அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆந்திர அரசு, குறிப்பாக தாய் - சேய் நல திட்டத்துக்காக மத்திய அரசு வழங்கிடும் ஊட்டச் சத்துக்களுக்கு கூட ‘ஜெகனன்ணா பால்’, ஜெகனண்ணா ஊட்டச் சத்து என பெயர் வைத்து குறுக்கு வழியில் ஆதாயம் தேடுவதாக புகார்கள் வந்ததால், அவை குறித்து விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இந்த துறைக்கு மத்திய அரசு அனுப்பிய ரூ.187 கோடிக்கும் கணக்கு காண்பித்தல் அவசியம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆந்திர தலைமை செயலரிடமும் விளக்கம் கேட்டுள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.