Published : 15 Mar 2016 09:54 AM
Last Updated : 15 Mar 2016 09:54 AM

நாடாளுமன்ற துளிகள்: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 442 தொழிற்சாலைகள் மூடல்

நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நேற்று பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் அளித்த பதில்கள், உறுப்பினர்களின் கோரிக்கைகள் வருமாறு:

10,000 காஸ் விநியோகஸ்தர்கள் நியமனம்- பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்:

நாடு முழுவதும் 85 லட்சம் சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 50 லட்சம் பேருக்கு புதிய காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2016-17-ம் நிதியாண்டில் 10 ஆயிரம் சமையல் காஸ் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பல்கலை. தரவரிசை இணையதளம்- மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி:

தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் தரத்தை அறிந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக ‘உங்கள் கல்லூரியை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் இணையதளம் தொடங்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள சிறப்பு வசதிகள், அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

1033 இலவச தொலைபேசி உதவி எண்- மத்திய சாலை போக்குவரத்து இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்:

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நேரிடும்போது அவசர உதவிக்காக 1033 இலவச தொலைபேசி எண் மையம் அமைக்கப்படும். இதற்காக மேற்கு மண்டலத்தில் அகமதாபாத், தெற்கு மண்டலத்தில் மைசூரு, டெல்லி மண்டலத்தில் குர்காவ்ன், சண்டிகர் மண்டலத்தில் மொஹாலி உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

442 தொழிற்சாலைகள் மூடல்- சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

நாடு முழுவதும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜவுளி, ரசாயன உற்பத்தி தொடர்பான 442 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைக்கும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க, வளர்ந்த நாடுகள் முன்வந்துள்ளன. நாட்டில் 96,000 வகையான உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 50 உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x