Published : 04 Dec 2021 01:19 PM
Last Updated : 04 Dec 2021 01:19 PM

5 மாநிலத் தேர்தல்; ரூ.1,116 கோடி நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள்: ரூ.611 கோடி பெற்ற பாஜக - ரூ.252 கோடி செலவு

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடந்த அசாம், கேரளா, தமிழகம், மே.வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 19 அரசியல் கட்சிகள் சேர்ந்து ரூ.1,100 கோடி நன்கொடை வசூலித்துள்ளன என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

இதில் ரூ.500 கோடி விளம்பரத்துக்காகவும், போக்குவரத்துச் செலவுக்காகவும், நட்சத்திர பிரச்சாரகர்கள் செலவுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் அசாம், மேற்கு வங்கம், தமிழம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள், செலவு விவரங்களைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளன. இந்தச் செலவு விவரங்களை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு பெற்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 அரசியல் கட்சிகள் ரூ.1,116.81 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில் ரூ.514.30 கோடி விளம்பரத்துக்காக மட்டும் செலவிட்டுள்ளன. இதில் அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகம் மூலம் நன்கொடையாக ரூ.875.33 கோடி பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் மூலம் குறிப்பிட்ட அளவு நன்கொடையும் பெறப்பட்டுள்ளது.

அந்த வகையில் 5 மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக விளம்பரத்துக்காக ரூ.282.80 கோடி செலவிட்டுள்ளன. அடுத்ததாக வேட்பாளர்களின் செலவுக்காக ரூ.235.66 கோடி செலவிட்டுள்ளன. போக்குவரத்துச் செலவுக்காக ரூ.119.57 கோடியும், இதர செலவுக்காக ரூ.64.33 கோடியும் செலவிட்டுள்ளன. 5 மாநிலத் தேர்தலிலும் ஊடக விளம்பரத்துக்காக அரசியல் கட்சிகள் ரூ.201.06 கோடி செலவிட்டுள்ளன. அடுத்ததாக, பதாகைகள், ஃப்ளக்ஸ், சுவரொட்டிகள் உள்ளிட்ட விளம்பரத்துக்காக ரூ.63.72 கோடியும், பொதுக்கூட்டங்களுக்காக ரூ.17.308 கோடியும் செலவிட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகம் மூலம் 5 மாநிலத் தேர்தலுக்காக ரூ.875 கோடி நன்கொடையாகப் பணம் மற்றும் வரைவோலை மூலம் பெறப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நன்கொடையில் தலைமை அலுவலகம் மூலம் பெறப்பட்ட நிதி என்பது 78 சதவீதமாகும். காசோலை மூலம் ரூ.844 கோடியும், ரொக்கப் பணமாக ரூ.30 கோடியும் பெறப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பாஜக அதிகபட்சமாக ரூ.611.69 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதில் தலைமை அலுவலகம் மூலம் ரூ.532 கோடி, கேரளாவில் ரூ.8.654 கோடி, தமிழகத்தில் ரூ.16.32 கோடி, அசாமில் ரூ.27 கோடி, மே.வங்கத்தில் ரூ.21 கோடி, புதுச்சேரியில் ரூ.5 கோடி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ.193.77 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. இதில் தலைமை அலுவலகம் மூலம் ரூ.134 கோடி, கேரளாவில் ரூ.36 கோடி, தமிழகத்தில் ரூ.4.10 கோடி, அசாமில் ரூ.10 கோடி, மே.வங்கத்தில் ரூ.6 கோடி, புதுச்சேரியில் ரூ.1 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் திமுக ரூ.134 கோடியும், அதிமுக ரூ.14.46 கோடியும், மே.வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ரூ.56 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

5 மாநிலத் தேர்தலிலும் அரசியல் கட்சிகள் சேர்ந்து விளம்பரத்துக்காக ரூ.514 கோடி செலவிட்டுள்ளன. இதில் பாஜக மட்டும் 5 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.163 கோடி செலவிட்டுள்ளது. ஒட்டுமொத்த செலவில் 31% செலவிட்டுள்ளது. அடுத்ததாக திமுக ரூ.114 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் ரூ.79 கோடியும், காங்கிரஸ் ரூ.57 கோடியும், அதிமுக ரூ.57 கோடியும் செலவிட்டுள்ளன.

இதில் திமுக ரூ.134 கோடி நன்கொடையாகப் பெற்று, அதில் ரூ.114.14 கோடி விளம்பரத்துக்காகச் செலவிட்டுள்ளது. விளம்பரத்துக்காக ரூ.54.14 கோடியும், ரூ.2.414 கோடி போக்குவரத்துச் செலவுக்காகவும், நட்சத்திரப் பேச்சாளர்கள், வேட்பாளர்களுக்காகவும் செலவிட்டுள்ளது.

அதிமுக ரூ.14.46 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. ரூ.57.33 கோடி தேர்தல் செலவாகக் கணக்கில் காட்டப்பட்டு அதில் ரூ.56.75 கோடி விளம்பரத்துக்காகச் செலவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.79.24 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் செலவாக ரூ.5.68 கோடியும், விளம்பரத்துக்காக ரூ.3.50 கோடியும் செலவிட்டுள்ளது.

பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக, ஏஐஎம்ஐஎம், சிபிஐ (எம்எல்)(எல்), ஏஐஎப்பி, ஏஜிபி, ஏஐயுடிஎப், பாமக, மதச்சார்பற்ற ஜனதா தளம், கேசி-எம், சமாஜ்வாதி, ஏஐஎன்ஆர்சி ஆகிய கட்சிகளின் செலவுகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x