தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம்: சென்னை உள்ளிட்ட 5 இடங்கள்

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம்: சென்னை உள்ளிட்ட 5 இடங்கள்

Published on

தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்காக சென்னை, கோவை, ஓசூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய ஐந்து முனைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக, உ.பி பாதுகாப்பு தளவாட வழித்தடங்கள் ரூ 20,000 கோடி முதலீட்டை ஈர்க்கும்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட் கூறியதாவது:

நாட்டில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களை அமைப்பதாக 2018-19 பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, இந்த வழித்தடங்களை உத்தரப் பிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்காக அலிகார், ஆக்ரா, சித்ரகூட், ஜான்சி, கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய ஆறு முனைகளும், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்காக சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய ஐந்து முனைகளும் அடையாளம் காணப்பட்டன.

இரு மாநிலங்களிலும் ரூ 20,000 கோடி மதிப்புள்ள முதலீட்டை 2024-25-ம் ஆண்டிற்குள் ஈர்ப்பதை இந்த வழித்தடங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. வழித்தடத்திற்கு தேவையான நிலங்கள், இணைப்பு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளை அந்தந்த மாநில அரசுகள் வழங்குகின்றன.

இந்த இரண்டு வழித்தடங்களில் முதலீடு செய்வதற்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் உபகரண உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை அளிப்பதற்க்காகவும் தத்தமது விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in