Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM

நிதி சேவை தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்கள் நம்பிக்கையை பெற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

புதுடெல்லி

சர்வதேச நிதி சேவை மைய ஆணையம் (ஐஎப்எஸ்சிஏ) மற்றும் புளூம்பெர்க் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:

நிதி பரிவர்த்தனையில் பின்டெக் எனப்படும் தொழில்நுட்பம் மிக அதிக அளவில் யுபிஐ மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வழியேற்படுத்தியுள்ளது. பின்டெக் தொழில்நுட்பமானது நிதி பரிவர்த்தனையில் ஒவ்வொரு இந்தியனும் சுதந்திரமாக செயல்பட வழியேற் படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தசெயல்பாடுகளில் சில குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டியது அவசியம்

மிக அதிகளவில் அனைத்துத்தரப்பு மக்களும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் அதிகபட்ட நம்பிக்கை வைத் திருப்பதன் மூலம்தான் இதை பயன்படுத்துகின்றனர். நம்பிக்கை என்பது நிறுவனங்களுக் குள்ள பொறுப்பின் அங்கம். அந்த வகை யில் இத்தகைய தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

பின்டெக் தொழில்நுட்பமானது அதில் அதிகபட்ச பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்யும்தொழில்நுட்பத்தை வழங்குவதில் தான் உள்ளது. இதன் மூலம் உலகிற்கு தனது நிபுணத்துவத்தை இந்தியா பகிர்ந்தளிக்க முடியும். இந்தியாவின் நிதி நிலை நாட்டின் பொருளாதாரத்தை உணர்த்தும். அதை எடுத்துச் செல்லும் கருவியாக தொழில்நுட்பம் விளங்குகிறது.

அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்தது பின்டெக் புரட்சியாகும். பின்டெக் நுட்பமானது நான்கு தூண்களைக் கொண்டது. வருமானம், முதலீடு, காப்பீடு மற்றும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது. வருமானம் அதிகரிக்கும் போது, முதலீடுகள் சாத்திய மாகும். அத்துடன் காப்பீடு தேவையாகும்.

இதில் நிறுவனங்கள் வழங்கும் நிதிச் சேவையானது மக்களின் நம்பகத் தன்மையைப் பெறுவதாக இருக்க வேண்டும். இந்த நான்கும் ஒன்றிணைந்ததுதான் பின்டெக் புத்தாக்கமாகும். இந்தியாவின் யுபிஐ மற்றும் ரூபே முறையானது அனைத்து நாடுகளுக்கும் மிகச் சிறந்த குறைந்த செலவிலான தொழில்நுட்பத்தை வழங்குவதாகவும், மிகவும் நம்பகமான நிதி பரிவர்த்தனை மேற்கொள்ளும் வழியாகவும் விளங்கி வருகிறது. அத்துடன் உள்நாட்டில் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ளவும் உதவுகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x