Last Updated : 04 Dec, 2021 03:07 AM

 

Published : 04 Dec 2021 03:07 AM
Last Updated : 04 Dec 2021 03:07 AM

ஒமைக்ரான் வைரஸ் பாதித்த இருவருடன் தொடர்பு; கர்நாடக மாநிலத்தில் 500 பேருக்கு தொற்று குறித்து பரிசோதனை: தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய 10 பேரை தேடும் போலீஸார்

பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 500 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

கடந்த 20-ம் தேதி தென்னாப் பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த‌ 66 வயது நபருக்கும், பெங்களூருவை சேர்ந்த 46 வயதான மருத்துவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்தநபர் பெங்களூருவில் உள்ளஷாங்கிரி லா நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத் தப்பட்டிருந்தார். சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் கடந்த 27-ம்தேதி அவர் துபாய்க்கு சென்றுவிட்டார். இதுதொடர்பாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நபர் மற்றும் நட்சத்திர விடுதியின் நிர்வாகத்தின் மீது போலீஸில் சுகாதாரத் துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.

மற்றொரு நோயாளியான பெங்களூரு மருத்துவர் கடந்த 2 ஆண்டுகளாக வெளிமாநிலம், வெளிநாட்டுக்கு செல்லவில்லை. யார் மூலமாக அவ‌ருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த‌ 5 பேரும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறியஅவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த இரு நோயாளிகளுடனும் நேரடியாக தொடர்பில் இருந்த டாக்ஸி ஓட்டுநர், விடுதி ஊழியர் கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட 130 பேர் மற்றும் மறைமுக தொடர்பாளர்கள் 372 பேரைகண்டறிந்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் பரிசோதனை மேற் கொண்டுள்ளனர். இந்த 502 பேரின் முடிவுகள் வெளிவராத நிலையில் அவர்கள் வீடு மற்றும் விடுதிகளில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தவிர தென்னாப் பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகா திரும்பிய அனைவரையும் கண்டறிந்து, கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இதில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு திரும்பிய 10 பேரை மாநகராட்சி அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடியவில்லை. போலீஸாரின் உதவியுடன் அவர்களை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறும்போது, ‘‘தென்னாப் பிரிக்காவை சேர்ந்தவருக்கு சோதனை முடிவில்ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. துபாய்க்கு தப்பியோடிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒமைக்ரான் வைரஸை எதிர் கொள்வது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்''என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒமைக்ரான் பரவல் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் வரும் ஜனவரி 15-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி வணிக வளாகம், திரையரங்கம், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வோர் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும்.

அதே போல பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பும் பெற்றோர், அன்றாடம் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், அரசியல் நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. கேரளா, மகாராஷ்டிரா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து வருவோரும் கரோனா நெகட்டிவ், 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணங்களை கொண்டுவர வேண்டும். இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x