மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அரசு முடிவு
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத் தரங்கில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் கிஷன் பால் குர்ஜார் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகள் தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு வரையறுத்து வருகிறது. இதில் 12 வகையான உடல் குறைபாடுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றன. இந்த அடையாள அட்டைகள் வேறு மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும்.

மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்துவதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 50 நகரங்களில் 100 அரசு மற்றும் தனியார் அலுவலக கட்டிடங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ.218 கோடி செலவாகும்.

ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத 15 ஆயிரம் குழந்தை களுக்காக ரூ.900 கோடியில் கருவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1800 முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in