Published : 03 Dec 2021 05:53 PM
Last Updated : 03 Dec 2021 05:53 PM

காங்கிரஸ் ஆழ்ந்த உறைநிலைக்கு போய்விட்டது; இனி மம்தா ஒருவர்தான் இருக்கிறார்: திரிணமூல் கடும் தாக்கு

மம்தா பானர்ஜி | கோப்புப் படம்

காங்கிரஸ் ஆழ்ந்த உறைநிலைக்கு போய்விட்டது, இனி மம்தா பானர்ஜி ஒருவர்தான் இருக்கிறார் என்று திரிணமூல் காங்கிரஸ் தாக்குதல் தொடுத்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸின் தற்போதைய தேர்தல் வெற்றி நாட்டின் பலமான எதிர்க்கட்சியாக உருவெடுக்கமுடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்துள்ளதை அவர்களது சமீபத்திய காங்கிரஸ் எதிர்ப்பு அறிக்கைகளில் வெளிப்பட்டுவருகின்றன.

மேகாலயாவில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேரை மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி சமீபத்தில் சேர்த்தது. ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கீர்த்தி ஆசாத் மற்றும் கோவா முன்னாள் முதல்வர் லூயிசின்ஹோ ஃபலேரோ போன்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்களையும் திரிணமூல் கட்சி சமீபத்தில் ஏற்றுக்கொண்டது.

இதன்மூலம் திரிணாமூல் தனது தேசிய காலடித் தடத்தை விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை திரிணமூல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

அக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘ஜாகோ பங்களா’ பத்திரிகையில், "காங்கிரஸ் ஆழ்ந்த உறைநிலையில் காங்கிரஸ்'' என்று தலைப்பிடப்பட்டு இன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அதில், காங்கிரஸின் தலைமை என்பது தனி ஒருவரின் தெய்வீக உரிமை அல்ல என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சித் தலைமை ஜனநாயக ரீதியாக முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் கிஷோர் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் வியூகவாதிகள் மட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர்களும் கட்சித் தலைமையை விமர்சிக்கின்றனர்.

காங்கிரஸ் ஆழ்ந்த உறைந்தநிலைக்கு போய்விட்டது என்பதையே இது காட்டுகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப எதிர்க்கட்சிகள் இப்போது மேற்கு வங்க முதல்வரை எதிர்பார்த்து வருகின்றன.

நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவராக உருவெடுக்கும் நிலையில் இனி மம்தா ஒருவர்தான் இருக்கிறார்.

பாஜகவை எதிர்த்துப் போராட திரிணாமூல் உறுதிபூண்டுள்ளது. காங்கிரஸ் எதற்கும் பயன்படாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்பதை திரிணமூல் நீண்ட காலமாக கூறி வருகிறது.

பாஜகவை எதிர்த்து போராடும் வைராக்கியமோ, உறுதியோ அவர்களுக்கு இல்லை. அக்கட்சி உட்கட்சி பூசல்களால் சிக்கித் தவிக்கிறது, எதிர்க்கட்சிகளை திரட்டி கட்டியெழுப்புவதற்கு நேரமோ சக்தியோ அதற்கு இல்லை. காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) என்று ஒன்று இப்போது இல்லை.

நாட்டிற்கு தற்போது ஒரு மாற்று முன்னணி தேவை, எதிர்க்கட்சிகள் அந்தப் பொறுப்பை மம்தா பானர்ஜியிடம் கொடுத்துள்ளன. அந்த வெற்றிடத்தை நிரப்ப அவர்கள் அவரை எதிர்நோக்கி உள்ளனர். மம்தா தற்போது நாட்டில் மிகவும் பிரபலமான எதிர்க்கட்சி முகமாக உள்ளார்.

இவ்வாறு திரிணமூல் கட்சியின் ஜாகோ பங்களா பத்திரிகை தெரிவித்துள்ளது.

மம்தா பானர்ஜி தற்போதைய மும்பை பயணத்தின்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு,''யுபிஏ (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) என்றால் என்ன? ஏபிஏ என்று ஒன்று இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் பதிலடி

இதற்கிடையில், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பானர்ஜியின் கருத்துகளுக்கும் கிஷோர் கூறியதற்கும் பதிலடி தந்துள்ளனர்.

காங்கிரஸின் மூத்த தலைவர் கபில் சிபல், ''காங்கிரஸ் இல்லாத யுபிஏ ஆன்மா இல்லாத உடல்'' என்று தெரிவித்துள்ளார்.

கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான பவன் கேரா மற்றும் சுப்ரியா ஷிரினேட் ஆகியோர் பானர்ஜியின் முந்தைய செயல்பாடுகளை பாஜக தலைமையிலான என்டிஏவின் (தேசிய ஜனநாயகக் கூட்டணி) கூட்டாளியாக தொடக்கத்தில் இருந்ததைக் குறிப்பிட்டு, ராகுல் காந்தி பாசிஸ்டுகளுடன் ஒருபோதும் சேரமாட்டார் என்பதில் நாட்டு மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x