‘‘காயத்தில் உப்பு தடவாதீர்கள்; ஆத்திரமூட்டாதீர்கள்’’ - பாஜகவுக்கு சசி தரூர் கண்டனம்

‘‘காயத்தில் உப்பு தடவாதீர்கள்; ஆத்திரமூட்டாதீர்கள்’’ - பாஜகவுக்கு சசி தரூர் கண்டனம்
Updated on
1 min read

பாஜக எம்.பி.க்கள் இங்கு வந்து போராட்டம் நடத்துவது காயங்களில் உப்பைத் தடவியது போன்றது, தேவையில்லாமல் ஆத்திரமூட்டுவதாக இருப்பதாக சசி தரூர் சாடியுள்ளார்.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்துகின்றன.

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள், உள்ளேயும் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபடுவதால், இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை கண்டித்து அதேச காந்தி சிலை முன்பு பாஜக எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி கோஷம் போட்டனர்.

இந்தநிலையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் இன்று நடத்திய போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியதாவது:

‘‘பாஜக எம்.பி.க்கள் இங்கு வந்து போராட்டம் நடத்துவது காயங்களில் உப்பைத் தடவியது போன்றது. தேவையில்லாமல் ஆத்திரமூட்டுவதாக உள்ளது. அவர்களுக்கு எதிராக ஏதாவது நடந்து இருந்தால் பாஜக ஒற்றுமையைக் காட்ட போராட்டம் எனக் கூறுவது நியாயமாக இருக்கலாம். ஆனால் எங்கள் நண்பர்கள் மாநிலங்களவையில் இருந்து அநியாயமாக ஒரு தலைபட்சமாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற்ற காரணமானவர்களே போராட்டம் நடத்துவது வேடிகையாக உள்ளது’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in