

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 4 விமான நிலையங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக சிவில் விமானத்துறை இணை அமைச்சர் ஜெனரல்வி.கே.சிங் தெரிவித்தார்.
மக்களவையில் உறுப்பினர்கள் வருண் காந்தி, ராம் சங்கர் கதேரியா ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் விவரம் வருமாறு:
இதுவரையில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் (எப்ஆர்டி) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும் இந்திய விமான ஆணையம் எப்ஆர்டி அடிப்படையிலான பயோமெட்ரிக் சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. முதல் கட்டமாக டிஜி யாத்ரா வாரணாசி, புணே, கொல்கத்தா, விஜயவாடா ஆகிய விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டிஜிட்டல் யாத்ரா வசதியானது அடுத்த ஆண்டு மார்ச் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தபிறகுநாட்டின் பிற விமான நிலையங்களில் இம்முறை படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
டிஜிட்டல் அடிப்படையில் பயணத்தை தேர்வு செய்ய விரும்பும் பயணிகள் இதற்காக உருவாக்கப்பட்ட செயலியில் முக அடையாளம், பயண விவர எண் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும். பயணத்தின்போது அவர்கள் பயோமெட்ரிக் அடிப்படையில் முக அடையாளத்தின் மூலம் விமானநிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
இத்தகைய வசதியைப் பெறவிரும்பாத பயணிகள் வழக்கம்போல மனித பரிசீலனைக்கு உள்பட்டு பயணத்தைத் தொடரலாம்.
டிஜிட்டல் யாத்ரா எகோசிஸ்டம் என்ற முறையில் பயணிகள் விவரம் குறிப்பிட்ட இடைவெளியில் மதிப்பீடு செய்யப்படும். முக அடையாளம் காணும் தொழில்நுட்பமானது ஐஎஸ்ஓ சான்று அடிப்படையில் தேசிய தர மற்றும்தொழில்நுட்ப மையம் (என்ஐஎஸ்டி) வடிவமைத்துள்ளது. இதில் பகிரப்படும் பயணிகள் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அதேசமயம் பயணிகள் விமான பயணத்தை மேற்கொண்டு 24 மணி நேரத்துக்குப் பிறகு முழுவதுமாக நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.