Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM

உலக தடகள அமைப்பு சார்பில் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு சிறந்த பெண்மணி விருது

அஞ்சு பாபி ஜார்ஜ்

மோனாக்கோ

உலக தடகள அமைப்பு சார்பில் இந்த ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருது புகழ்பெற்ற இந்திய முன்னாள் தடகள நட்சத்திர வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜூக்கு வழங்கப்பட்டுள்ளது.

மோனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு உலக தடகள அமைப்பின் வருடாந்திர விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்த ஆண்டின் சிறந்தபெண்மணிக்கான விருது புகழ்பெற்ற இந்திய முன்னாள் தடகள நட்சத்திர வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜூக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இளம் வீரர்களின் திறமைகளை வளர்த்ததற்காகவும், பாலின சமத்துவத்தை ஆதரித்ததற்காகவும் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு நடை பெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் அஞ்சு. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியிருந்தார்.

உலக தடகள அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முன்னாள் சர்வதேச நீளம் தாண்டுதல் வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் இன்னும் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டில் அவர் இளம் பெண்களுக்கான பயிற்சி அகாடமியைத் திறந்தார், இது உலக அளவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை உருவாக்க உதவியது. இந்திய தடகள சம்மேளனத்தின் மூத்த துணைத் தலைவராக பாலின சமத்துவத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அஞ்சு பாபி ஜார்ஜ், விளையாட்டுத் துறையில் எதிர்கால தலைமைப் பதவிகளை அடைய பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளது.

அஞ்சு பாபி ஜார்ஜ் தனது ட்விட்டர் பதிவில், “உலக தடகள அமைப்பின் சார்பில் ஆண்டின் சிறந்த பெண்மணிக்கான விருதுவழங்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. தினமும் விழித்தெழுந்து விளையாட்டுக்குத் திரும்பக் கொடுப்பதை விட சிறந்த உணர்வு வேறு எதுவும் இல்லை, இது இளம் பெண்களை இயக்கவும், மேம்படுத்தவும் அனுமதிக்கிறது. எனது முயற்சிகளை அங்கீகரித்ததற்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x