

நாட்டின் உற்பத்தி நகராக குஜராத் மாநிலம் முன்னேறியுள்ளது. இதுவரை இந்த இடத்தைத் தக்கவைத்திருந்த மகாராஷ்டிர மாநிலம் இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் சேவைத்துறையில் முதன்மை மாநில அந்தஸ்தை மகாராஷ்டிரா தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நிகர மதிப்பு கூட்டு அடிப்படையில் (ஜிவிஏ) உற்பத்தித் துறையில் 15.9 சதவீத வளர்ச்சியை 2012 முதல் 2020 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநிலம் எட்டியுள்ளது. இதன் மூலமான மதிப்பு ரூ. 5.11 லட்சம் கோடி என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தித்துறை ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாகவும் அதன் மூலமான வருவாய் ரூ.4.43 லட்சம் கோடியாக உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் சேவைத்துறையில் முன்னணி மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ள மாநிலங்களில் மிக மோசமாக செயல்பாடுகளைக் கொண்ட மாநிலங்கள் வரிசையில் ராஜஸ்தான் (3.8%),தெலங்கானா (5.5%), ஆந்திரா(6.9%) மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
உற்பத்தி அதிகமுள்ள பிற மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு ரூ. 3.43 லட்சம் கோடி, கர்நாடகா ரூ.2.1 லட்சம் கோடி, உத்தரப் பிரதேசம் ரூ.1.87 லட்சம் கோடி என்றஅளவில் உள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்துறை வளர்ச்சி ரூ. 16.9 லட்சம் கோடியாகும். குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிக முதலீடுகளும் இதற்கு பிரதான காரணமாகும்.