Last Updated : 03 Dec, 2021 03:06 AM

 

Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM

இந்தியாவுக்குள் நுழைந்தது உருமாறிய கரோனா வைரஸ்; பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; மத்திய அரசு உறுதி செய்தது: தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவரிடம் இருந்து சளி மாதிரியை எடுக்கும் சுகாதார ஊழியர். படம்: பிடிஐ

பெங்களூரு

பெங்களூருவில் இருவருக்கு புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பரவி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ‘ஒமைக்ரான்’ என உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியது.

தென்னாப்பிரிக் காவைத் தொடர்ந்து போட்ஸ் வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலும் ஒமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. வெளிநாட்டு விமான சேவைகளையும் ரத்து செய்து வருகின்றன.

இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இருவருக்கு இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை நேற்று அறிவித்தது. வைரஸின் மரபணு மாறுபாடுகளை கண்காணிக்கும் இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கடந்த 20-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து 66 வயதான ஒருவர் பெங்களூரு வந்தார். தனியார் விடுதியில் தங்கியிருந்த அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரி கரோனா, டெல்டா வைரஸ் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டிருந்தது. இதையடுத்து, அவரது மாதிரி டெல்லிக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், அது ஒமைக்ரான் வைரஸ் என்பது உறுதியானது.

தனியார் விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவருடன் தொடர்பில் இருந்த விடுதி ஊழியர்கள், டாக்ஸி ஓட்டுநர் உட்பட 212 பேருக்கு பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும், நேரடியாக தொடர்பில் இருந்தவர் கள் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல, பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளியைச் சேர்ந்த 46 வயது நபருக்கு கடந்த 21-ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனை ஊழியரான அவரது மாதிரியை பரிசோதித்ததில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. அதேபோல வெளிநாட்டினருடன் தொடர்பும் வைத்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இவருடன் தொடர்பில் இருந்த 218 பேரை பரிசோதித்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதித்துள்ளதா என்பதை கண்டறிய அவர்களின் மாதிரிகள் வைராலஜி நிபுணர்களின் சோதனைக்காக அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. அதேவேளையில் எச் சரிக்கை உணர்வுடன், போதிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தவும், கையாளவும் தேவையான மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணியில் அரசு இறங்கியுள்ளது. இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.

சோதனை கொள்ளை

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த சோதனைக்காக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுவதாக பயணிகள் முறையிட்டுள்ளனர். சோதனை முடிவுக்காக 3 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும் நிலையில், விமான நிலையத்தில் 10 மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப் பதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஹைதராபாத் வந்தவருக்கு ஒமைக்ரான்?

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: பிரிட்டனில் இருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு நேற்று வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது சளி, ரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவர் தற்போது டிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தெலங்கானா மாநில சுகாதாரத் துறை செயலாளர் நிவாச ராவ் கூறியதாவது:

பிரிட்டனில் இருந்து ஹைதராபாத் வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. பரிசோதனை முடிவு வந்த பிறகே அவரை தாக்கியிருப்பது எந்த வகை தொற்று என்பது தெரியும். ஒமைக்ரான் தொற்று, டெல்டா தொற்றைவிட 6 மடங்கு வேகமாக பரவும் என கூறப்படுகிறது. சில நாட்களிலேயே 29 நாடுகளுக்கு இது பரவி உள்ளதே இதன் தீவிரத்தை காட்டும் வகையில் உள்ளது.

எனவே, பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். முகக் கவசம் அணிதல், அடிக்கடி கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கரோனா விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களிடம் இனி ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். இதேபோல, 2 தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழ் வைத்திருப்பதும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x