

பருத்திக்காக மத்திய அரசின் 11 சதவிகித இறக்குமதி வரியை ரத்து செய்து, நூல் தொழிற்சாலைகளுக்கு வட்டி விகிதத்தில் 5 சதவிகித மானியம் அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதை மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் திமுக எம்.பி.யான எஸ்.ஆர்.பார்த்திபன் வலியுறுத்தினார்.
இது குறித்து நூல் தொழிற்சாலைகள் நிறைந்த சேலம் தொகுதியின் எம்.பியான எஸ்.ஆர்.பார்த்திபன் மக்களவையில் பேசியதாவது: நவம்பர் மாதம் முதல் தேதியில் நூல் விலையை மத்திய அரசு அறிவித்தது.
இதில், அனைத்து ரகங்களிலும் ரூ.50 உயர்த்தி இருப்பது அத்தொழில் துறையினரை அதிருப்தியாக்கி விட்டது. நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளது.
இந்தியாவில் நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதியும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் இரண்டாவது உயரிய தொழிலான ஜவுளித் துறையின் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்.
இதனால், வருவாய் இழப்புகளும், வேலைவாய்ப்புகளும் பறி போய் விடும். இதற்கு முக்கியக் காரணம் 2021-22 ஆம் ஆண் டிற்கான பட்ஜெட்டில் பருத்திக்கான இறக்குமதியில் அடிப்படை வரியை ஐந்து சதவிகிதம் உயர்த்தியது காரணம்.
இத்துடன், ஐந்து சதவிகிதம் வேளாண் கட்டமைப்பிற்கான வரியும், பத்து சதவிகிதம் சமூகநல வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பருத்தி இறக்குமதிக்கான ஒட்டுமொத்த வரி 11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
இதில், ஜவுளித்துறை பாதிக்கப்படாமல் இருக்க பருத்தி இறக்குமதியில் உயர்த்தப்பட்ட 11 சதவிகித வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் வேலைவாய்ப்பை இழப்பையும் தடுக்க மத்திய ஜவுளித்துறையும் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்.
இதுமட்டுமின்றி, மின்னணு ஏலத்தில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்தி, 500 பருத்தி பேல்கள் போதுமானதாக அறிவிக்கப்பட வேண்டும். அப்போது தான் அந்த ஏலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் பங்குபெற ஏதுவாக இருக்கும்.
அதேசமயம், டிசம்பர் முதல் மார்ச் வரையிலான பருத்தி கொள்முதல் காலக்கட்டத்தில் நூல் தொழிற்சாலைகளுக்கு ஐந்து சதவிகித மானியம் அளிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.