Published : 02 Dec 2021 05:07 PM
Last Updated : 02 Dec 2021 05:07 PM

2024-ல் கூட காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லை: குலாம் நபி ஆசாத் விரக்தி

குலாம் நபி ஆசாத் | கோப்புப் படம்.

2024 தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைமைக்க வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளது காங்கிரஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் சமீபகாலமாக காங்கிரஸ் செயல்பாடுகளில் மிகவும் அதிருப்தியாக காணப்படுகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியில் மிகப்பெரிய மாற்றங்களைக்கோரி கடிதம் எழுதிய ஜி 23 அல்லது 23 காங்கிரஸ் தலைவர்களின் குழுவின் முக்கிய அங்கமாக ஆசாத் மாறினார்.

காஷ்மீரின், பூஞ்ச் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் கலந்துகொண்டு குலாம் நபி ஆசாத் பேசியதாவது:

"2019- இல் நீக்கப்பட்ட சட்டப்பிரிவான, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது பிரிவை மீட்டெடுப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மக்களை மகிழ்விப்பதற்காக நம் கையில் இல்லாததைப் பற்றி நான் பேசமாட்டேன். நட்சத்திரங்களையும் சந்திரனையும் பறித்துத் தருவேன் என்றெல்லாம் நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது.

இப்பிரச்சினையில் நீதிமன்றத்தைத் தவிர யாரேனும் எதையும் செய்ய முடியும் என்றால் அது இந்த நடவடிக்கைக்கு காரணமான தற்போதைய அரசு தான் அதை செய்யமுடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்ற முடியும். அதற்கு 300 எம்.பி.க்கள் வேண்டும். ஆனால் 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூட காங்கிரஸ் இந்த எண்ணிக்கையை பெற முடியாது.

கடவுள் விரும்பினால் ஒருவேளை நாம் வெற்றி பெறுவோம் ஆனால் இப்போது இல்லை. அதனால் நான் எந்த பொய்யான வாக்குறுதிகளையும் கொடுக்க மாட்டேன். மேலும், காங்கிரஸ் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சிக்கிக்கொண்டுள்ளது. அதைத் தாண்டி அக்கருத்துக்கள் வெளிவருவதில்லை.

இவ்வாறு ஆசாத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x