Published : 02 Dec 2021 02:26 PM
Last Updated : 02 Dec 2021 02:26 PM

பாப்கார்ன் இல்லைங்க; ஒமைக்ரான்: பிசிசிஐக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. எச்சரிக்கை

புதுடெல்லி

தென் ஆப்பிரிக்காவில் ஆபத்து மிகுந்த கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதையடுத்து, இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை தலைமைக் கொறடாவான மர்கானி பாரத் ராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஓமைக்ரான் வகை ைவரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 23 நாடுகளுக்கு பரவிவிட்டது என்றும் அதன் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகதாார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் ஒமைக்ரான் வைரஸ் எந்த அளவு வேகமாகப் பரவும், அதன் தீவிரத்தன்மை, நோய் பாதிப்பு, அறிகுறிகள், உயிரிழப்பு ஆகியவை குறித்து முழுமையான விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில், உலக நாடுகள் பெரும் பீதியில் உள்ளன.

இந்நிலையில் இந்திய அணி இம்மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடருக்காகச் செல்கிறது. வரும் 17-ம் தேதி முதல் டெஸ்ட்தொடர் தொடங்குகிறது. ஏற்கெனவே இந்திய ஏ அணியினர் அங்கு விளையாடி வருவதால், அவர்களின் உடல்நிலையை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப பிசிசிஐ தயாராகி வருகிறது.

ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி பயணம் செய்யும் முன் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி அனுமதி பெற்றபின்புதான் செல்ல வேண்டும் என்று பிசிசிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் ரத்தாகுமா அல்லது தொடருமா என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜமகேந்திரவர்மன் தொகுதி எம்.பி. மர்கானி பரத் ராம் ட்விட்டரில் பிசிசிஐ அமைப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில் “ தென் ஆப்ரிக்காவில் பரவிவருவது பாப்கார்ன் இல்லை, ஒமைக்ரான் வைரஸ். கரோனாவின் உருமாற்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவை மூச்சுவாங்க வைக்கிறது.

ஏன் பிசிசிஐ இந்திய அணியின் தென் ஆப்பிரிக்க பயணத்தை தொடர விரும்புகிறது. வீரர்களுக்கு மோசமான உடல்நலப் பாதிப்புகள் வரக்கூடும். ஏற்கெனவே நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்கப் பயணத்தை ரத்து செய்துள்ளது. இந்திய அணியை தென் ஆப்பிரி்க்காவுக்கு அனுப்பாதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரத் ராம் எம்.பி.

ஆனால், பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில் “ நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி முடிந்தபின், வரும் 8-ம் தேதி இந்திய அணியின் சீனியர் வீரர்கள் தென் ஆப்பிரிக்கா செல்வார்கள் எனத் தெரிகிறது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் குறித்து எந்த கருத்தும் இல்லை. அதற்காக பிசிசிஐ காத்திருக்கிறது” எனத் தெரிவித்தனர்

முன்னாள் ரஞ்சி வீரரான எம்.பி. பரத் ராம் தி இந்து (ஆங்கிலம்) இதழுக்கு அளித்த பேட்டியில், “ தென் ஆப்பிரிக்காவுக்கு இந்த சூழலில் இந்திய அணியைஅனுப்புவது நியாயமற்றது, சிறந்த உதாரணமாக இருக்காது. வீரர்களின் உடல்நலத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.

ஒமைக்ரான் வைரஸ் குறித்து பெரிதாக ஏதும் தெரியாதபோது, மக்களை மத்திய அரசு எச்சரித்து வரும்போது, பிரபலங்களாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தென் ஆப்பிரி்க்க பயணம் செல்ல அனுமதிப்பதுநல்ல உதாரணமாக இருக்காது. இந்த வாரம் மக்களவையில் கரோனா வைரஸ் தொற்று குறித்த விவாதம் நடக்கும் போது, இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் குறித்து கேள்வியை எழுப்புவேன் ” எனத் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x