தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சிறப்பு வழக்கறிஞராக ராம் சங்கர் நியமனம்

ராம் சங்கர்
ராம் சங்கர்
Updated on
1 min read

தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அப்பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர்.ரஞ்சித் ஒம்மன் ஆப்ரஹாம் இன்று வழங்கினார்.

சென்னையின் இந்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் நிறுவப்பட்டது. இது, தமிழகத்தில் சட்ட படிப்புக்கு என பிரத்யேகமாக தொடங்கப்பட்ட அரசு சட்டப் பல்கலைக்கழகம் ஆகும்.

இதன் வேந்தராக தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி, சார்பு வேந்தராக தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளனர். இதன் துணைவேந்தராக டாக்டர்.என்.எஸ்.சந்தோஷ் குமார் அமர்த்தப்பட்டுள்ளார்.

இப்பல்கலைகழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக தமிழகத்தில் எட்டு உள்ளன. இவை, சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் செயல்படுகின்றனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தால் அதன் வளாகத்தில் நிறுவப்பட்ட சீர்மிகு சட்டப் பள்ளியானது, நாட்டில் உள்ள பிற தேசிய சட்டப் பள்ளிகளின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைகழகம், இந்திய பார் கவுன்சில்(பிசிஐ) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) ஆகியவற்றால் இந்த பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம்(ஏஜேயு), காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் சங்கம், லண்டன் மற்றும் இந்திய பொது நிர்வாக கழகம், டெல்லி ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது.

இந்தியாவின் தலை சிறந்த தமிழக நீதிபதிகள் மற்றும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் தமிழக அரசின் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்கள். இத்தகைய தனிச்சிறப்புகள் வாய்ந்த பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞராக டாக்டர். ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் நகரை சேர்ந்த ராம் சங்கர், கடந்த 2012 முதல் டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர், சமீபத்தில் சட்டப்படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருந்தார்.

இதில் ராம் சங்கரின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வின் தலைப்பாக ’இந்தியாவில் எப்படி உச்ச, உயர் நீதிபதிகள் நியமிக்க படுகிறார்கள்.’ என்பது இருந்தது. இதை அவர் ஹரியானா மாநிலம் குருகிராமின் ஜி.டி.கோயங்கா பல்கலைக்கழத்தில் பெற்றிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in