

உத்தராகண்டில் உள்ள 51 முக்கிய கோயில்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை திரும்பப் பெறுவதாக அம்மாநில அரசு நேற்று அறிவித்தது.
உத்தராகண்டில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட 51 முக்கிய கோயில்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக ‘சார் தாம்தேவஸம் அறக்கட்டளை’ என்ற சட்டத்தை மாநில அரசு கடந்த 2019-ம்ஆண்டு கொண்டு வந்தது.
இந்த சட்டத்துக்கு கோயில் அறங்காவலர்கள், தீட்சிதர்கள் மற்றும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை சமாளிக்கும் வகையில், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்திய அப்போதைய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை நடப்பாண்டு தொடக்கத்தில் பாஜக தலைமை நீக்கியது. அவருக்கு பதிலாக தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார்.
எனினும், இந்த விவகாரத்தில் மக்களின் எதிர்ப்பை அவரால் சமாளிக்க முடியாததால், கடைசியாக இந்துக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற புஷ்கர் சிங்தாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இருந்தபோதிலும், இந்த பிரச்சினை ஓயவில்லை. இது, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்களும் தெரிவித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய இந்த சட்டம் திரும்பப்பெறப்படுவதாக முதல்வர் புஷ்கர்சிங் தாமி நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.