

கொச்சி: கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், பாதிரியாருக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கோட்டியூர் செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கஞ்செரில். பத்தாம் வகுப்பு முடித்த சிறுமி, 2016-ம் ஆண்டு சர்ச்சில் கம்ப்யூட்டரில் பணிபுரிய வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவரை பாதிரியார் பலாத்காரம் செய்துள்ளார். அதனால் சிறுமி கருவுற்றார். இந்த விவகாரம் வெளியில் தெரிந்த பிறகு பிரச்சினையை சுமூகமாக தீர்க்க ராபின் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். எனினும், போலீஸார் கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து பாதிரியார் ராபினை கைது செய்தனர்.
இதையடுத்து, சர்ச்சின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பாதிரியார் ராபினை, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் நீக்கினார். ராபின் மீதான வழக்கை தலச்சேரி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதற்கிடையில், சிறுமிக்கு குழந்தைப் பிறந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.
இந்த சிறை தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராபின் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.நாராயண பிஷாரடி, சிறப்பு நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை நேற்று உறுதி செய்தார். எனினும், சிறப்பு நீதிமன்றம் ராபினுக்கு அளித்த 20 ஆண்டு சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்து நேற்று தீர்ப்பளித்தார். அதன்பின் ராபின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தார்.