ஒமைக்ரான்; வெளிநாட்டு விமானங்களை டிசம்பர் 15 முதல் இயக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

வெளிநாட்டு விமானங்களை டிசம்பர் 15 முதல் மீண்டும் இயக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பது என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவிய டெல்டா உருமாற்ற வைரஸ் காரணமாக இரண்டாவது கரோனா அலை ஏற்பட்டது. அதன் பேரழிவு விளைவுகள் தணிந்த நிலையில் அலுவலகங்களில் இயல்பான வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டன, பள்ளிகள் மெதுவாக மீண்டும் தொடங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒமைக்ரான் பரவல்குறித்த அச்சம் மேலோங்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது அலை முடிவுக்கு வந்ததையொட்டி வர்த்தக சர்வதேச விமானங்களின் மறுதொடக்கம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது ஒமைக்ரானின் பரவும் நிலையைக் கருத்தில் கொண்டு, இத்திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒமைக்ரான் பரவலை முன்னெச்சரிக்கையோடு தடுக்கும்வகையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இந்தியாவுக்குள் வரும் பயணிகளுக்கு ஏற்கனவே தொடர் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, புதிய கரோனா உருமாற்ற நோய்த்தொற்று ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகளாவிய சூழ்நிலையை இணைத்துப் பார்த்து, அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்திவருகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எங்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. வர்த்தக சர்வதேச விமானங்களின் மறுதொடக்கம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நடைமுறையில் ஒரே இரவில், கட்டுப்பாடுகள் மீண்டும் திரும்பியுள்ளன.

எனவே ஒமைக்ரான் பரவலை தடுக்கும்பொருட்டு சர்வதேச விமான சேவை மறுதொடக்கம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட வணிக சர்வதேச பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான தேதியைக் குறிக்கும் பொருத்தமான முடிவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.

இன்று காலை, உருமாற்ற ஒமைக்ரான் வைரஸ் ஆபத்தில் சிக்கியுள்ள உள்ள' நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சோதனையை உள்ளடக்கிய விமான நிலையங்களுக்கான தொடர் வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு அவசியம்.

இவ்வாறு விமானப்போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in