

தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை பாதிப்பு நிவாரண தொகையை ஒன்றிய அரசு விரைவாக வழங்க வேண்டும் என மக்களவையில் இன்று கே.நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தினார். தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடாளுமன்ற பூஜ்ஜிய நேரத்தில் அவர் பேசினார்.
இது குறித்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத்தலைவரும் ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யுமான கே.நவாஸ்கனி மக்களவையில் பேசியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் வழியாக புதிதாக அமைக்கப்படும் நான்குவழி சாலை பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வண்ணம் மாற்று பாதையில் அமைக்க வேண்டும்.
புதிதாக அமைக்கப்படும் பாலத்தினால் 400க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய அச்சத்தைப் போக்கும் வகையில், இத்திட்டத்தை மாற்று வழியாக மாற்றி பாதையில் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து தீவிரமான, துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஒன்றிய அரசின் குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றிருக்கிறார்கள். தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக குறைக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக மதுரை - சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் விமான சேவைகளை மீண்டும் அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.