Last Updated : 01 Dec, 2021 03:29 PM

 

Published : 01 Dec 2021 03:29 PM
Last Updated : 01 Dec 2021 03:29 PM

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் புதிய கூட்டணியை உருவாக்கும் மம்தா பானர்ஜி: ஓரங்கட்டப்படும் காங்கிரஸ் கட்சி

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

மும்பை

பாஜகவுக்கு எதிராக 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மே.வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார்.

டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக வந்த மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 3 நாட்கள் பயணமாகப் புறப்பட்டுள்ளார்.

அதில் நேற்று சிவசேனா கட்சித் தலைவரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரேவையும், மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசப்போவதாக மம்தா பானர்ஜி முதலில் தெரிவித்திருந்த நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சந்திப்பு ரத்தானது.

இதற்கிடையே இன்று பிற்பகலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேச உள்ளார். 2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளைத் திரட்டி மிகப்பெரிய அணியை உருவாக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். மகாராஷ்டிராவில் 3 நாட்கள் இருக்கும் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவரை சந்திக்கும் திட்டத்தில் இல்லை.

ஏற்கெனவே டெல்லிப் பயணத்தின்போது பல்வேறு தலைவர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்காமல் சென்றார். இதுகுறித்து மம்தாவிடம் நிருபர்கள் கேட்டபோது, “ டெல்லி வரும்போதெல்லாம் சோனியா காந்தியைச் சந்திக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சியை திட்டமிட்டு திரிணமூல் காங்கிரஸ் ஓரங்கட்டி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அதற்கு மம்தா பானர்ஜி தலைமை ஏற்கும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாஜகவை எதிர்க்கும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துவிட்டதால், மம்தா பானர்ஜி அந்தப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இதற்காகத்தான் தனது தடத்தை மே.வங்கத்தோடு நிறுத்தாமல் கோவா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் நீட்டித்துள்ளது திரிணமூல் காங்கிரஸ்.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல்வேறு முக்கியத் தலைவர்களையும் கபளீகரம் செய்துவருதால் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் இடையே பனிப்போர் உருவாகியுள்ளது. பாஜகவை எதிர்க்கும் விஷயத்தில் மட்டுமே இரு கட்சிகளும் ஒன்றாக இருந்தாலும், மற்ற விஷயங்களில் இருதரப்பும் எதிராகவே செயல்படுகிறார்கள்.

சமீபத்தில் மேகாலாயாவில் காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் முதல்வர் முகுல்சங்மா உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

கடந்த செப்டம்பரில் கோவா முன்னாள் முதல்வர் லூசிஹின்ஹோ பெலேரியா திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் 9 மூத்த தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தனர்.

அசாம் காங்கிரஸ் எம்.பி.யும், அனைத்து இந்திய மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுஷ்மிதா தேவ், திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தனர். இருவருக்கும் திரிணமூல் காங்கிரஸில் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டது.

2022-ம் ஆண்டு கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக வடக்கு கோவா காங்கிரஸ் தலைவர் உலாஸ் வஸ்கர், சிவசேனா மண்டலத் தலைவர் வினோத் போர்க்கர் இருவரும் கடந்த அக்டோபரில் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தனர்.

இது தவிர காங்கிரஸ் மூத்ததலைவர் கீர்த்தி ஆசாத், ஹரியாணா காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் தன்வர், உ.பி. காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ராஜேஷ்பதி திரிபாதி, லலித்பதி திரிபாதி இருவரும் திரிணமூல் காங்கிரஸில் கடந்த அக்டோபர் மாதம் சேர்ந்தனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒவ்வொரு செங்கலாக எடுத்து, தனது கோட்டையை மம்தா வலுப்படுத்தி, தனது தாய்க்கட்சியை ஓரம்கட்டி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x