

புதிதாக அமைந்த உத்தராகண்ட் தேவஸ்தான நிர்வாக வாரியத்தை கலைக்க அங்கு ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு துவக்கம் முதல் புனிதத்தலங்களின் பண்டிதர்களும், தீர்த்த புரோகிதர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது காரணம் எனக் கருதப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலமான உத்தராகண்டில் முக்கியப் பல புனிதத்தலங்கள் அமைந்துள்ளன. நான்கு தலங்கள் என்றழைக்கப்படும் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் இடம் பெற்றுள்ளன.
இவை உள்ளிட்ட அனைத்து கோயில்களும் அதன் பண்டிதர்களின் நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக இருந்தன. இதில் எழுந்த பல புகார்களின் காரணமாக அவற்றில் முக்கியமானவற்றை நிர்வாகிக்க 2019 இல் தேவஸ்தான நிர்வாக வாரியத்தை பாஜக அரசு அமைத்தது.
இதனால், கடும் கோபம் அடைந்த பண்டிதர்களும், தீர்த்த புரோகிதர்களும் ஒரு புதிய அமைப்பை உருவாக்கி பாஜக அரசை எதிர்க்கத் துவங்கினர். அடுத்த ஒரிரு மாதங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அந்த அமைப்பின் சார்பில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தனர்.
தமக்கு பல ஆண்டுகளாக கிடைத்து வந்த பலனை பறிக்க பாஜக அரசு முயல்வதாக உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் பண்டிதர்களால் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. தற்போது தீவிரமடைந்த எதிர்ப்பால் உத்தராகண்டின் சுமார் 15,000 பண்டிதர்கள் பாஜக அரசை எதிர்த்து டெராடூனில் தர்ணா அமர்ந்தனர்.
இதன் நான்காவது நாளான நேற்று உத்தராகண்டின் முதல்வரான புஷ்கர் சிங் தாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், பாஜக அரசு அமைத்த தேவஸ்தான நிர்வாக வாரியத்தை கலைக்கும் மசோதாவை நிறைவேற்ற இருப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டதிருத்த மசோதாக்களை வாபஸ் பெற்றது போல், உத்தராகண்டின் அரசும் இதை செய்துள்ளது. சில தினங்களில் துவங்கும் குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே அமலாக்க உள்ளது.
முதல்வர் தாமியின் அறிவிப்பை வரவேற்ற 15,000 பண்டிதர்கள் தம் தர்ணாவை கைவிட்டு நேற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்த தர்ணாவில் நவம்பர் 5 இல் கேதார்நாத் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து உத்தராகண்டின் கல்வித்துறை அமைச்சரான அர்விந்த் பாண்டே கூறும்போது, ‘இந்த வாரியம் குறித்து உத்தராகண்டின் பண்டிதர்கள், புரோகிதர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
அதில் வாரியம் அமைத்தது தவறு எனத் தெரிந்ததால் அதை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட பண்டிதர்கள் மற்றும் புரோகிதர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.’ எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் பாஜகவின் முதல்வராக இருந்த திரிவேந்தர்சிங் ராவத்தால் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. இதில், உறுப்பினர்களாக்க அரசு அழைப்பை பண்டிதர்களும், புரோகிதர்களும் மறுத்திருந்தனர்.