

இரண்டு தேசிய வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதைக் கைவிட வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், பொதுச்செயலாளர் டி.ரவிகுமாரும் நேரில் சந்தித்தனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விழுப்புரம் மக்களவை தொகுதி திமுக எம்.பியுமான டி.ரவிகுமார் கூறும்போது, ‘‘பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கான சட்ட மசோதாவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவேண்டாம் என வலியுறுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தேன்
தனியார்மயமாக்கலில் எந்த வங்கிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த கூட்டத்தொடரில் அந்த மசோதா பட்டியல் இடப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கு கேபினட் ஒப்புதல் கிடைக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார். அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடன் நானும் ஒரு மனு அளித்தேன்.
மழை வெள்ளத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பதையும் எடுத்துக்கூறினோம். தமிழ்நாடு அரசு கேட்டுள்ள பேரிடர் நிவாரண நிதியை விடுவித்து உதவுமாறு வலியுறுத்தினோம்.
பேரிடர் நிவாரண சட்டத்தில் உள்ளபடி நிச்சயம் செய்வதாக உறுதியளித்தார். எனவே, எங்கள் கோரிக்கையை மத்திய நிதியமைச்சகம் பரீசிலிக்கும் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.