

வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கூட உயிரிழக்காதபோது, இழப்பீடு குறித்த கேள்விக்கே இடமில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் 11 சுற்றுப் பேச்சுகளை மத்திய அரசு நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.
கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் சார்பில் நடந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்து பேசுகையில் “ வேளாண் போாரட்டத்தில் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை. அவ்வாறு உயிரிழந்ததாக அரசின் பதிவேட்டில் இல்லை. அந்த வேளாண் சட்டங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டன. விவசாயிகள் யாரும் போராட்டத்தில் உயிரிழக்காதபோது, அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் கேள்விக்கே இடமில்லை” எனத் தெரிவித்தார்