Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

உலகை அச்சுறுத்தும் புதிய வகை ஒமைக்ரான் கரோனா வைரஸை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியலாம்: பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு

கரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் நேற்று உயர்நிலை ஆலோசனை நடத்தினார்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை, விரைவு பரிசோதனை (ஆர்ஏடி) மூலம் ஒமைக்ரான் வைரஸை கண்டறியலாம். எனவே அனைத்து மாநில அரசுகளும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸின் மரபணு மாறி புதிய வகை வைரஸ்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. ஒரு வாரத்துக்குள் அந்த வைரஸ் சுமார் 16 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது உலகம் முழுவதும் புதிய கரோனா அலையை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துஉள்ளது.

இந்த சூழலில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் நேற்று காணொலி வாயிலாக உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில சுகாதார துறை செயலாளர்கள், மத்திய அரசு துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

வெளிநாட்டு பயணிகளுக்கு...

கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:

விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலை மார்க்கமாக வெளி நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வருவோரை பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும். 8 நாட்கள் தனிமைக்குப் பிறகு அவர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்.

விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். அங்கு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை பயணிகள் அங்கேயே காத்திருக்க வேண்டும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளை இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) ஆய் வகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

அனைத்து மாநில அரசுகளும் பரிசோதனை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். ஏதாவது ஒரு பகுதியில் கரோனா பரவல் அதிகரித்தால் அந்தப் பகுதியை சீல் வைக்க வேண்டும். அங்கு சேகரிக்கப்படும் மாதிரிகளை இன்சாகாக் ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

ஒமைக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வந்த பயணிகளை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களின் வீடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 8-வது நாள் கரோனா பரிசோதனைக்குப் பிறகு அவர்களுக்கு நேரடியாக மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்.

மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் படுக்கை, வெண்ட்டிலேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் ஆக்சிஜன் ஆலைகளை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்து, மாத்திரைகளை தங்கு தடையின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

100% தடுப்பூசி இலக்கு

கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசும்போது, "கரோனா தடுப்பு பணியில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. நம்முடைய அறிவு, அனுபவத்தை பயன்படுத்தி ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் நுழைவதை தடுக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து தரப்பு மக்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டு தீவிர தடுப்பூசி இயக்கம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் அளவுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2-ம் தவணை தடுப்பூசியில் பின்னடைவு காணப்படுகிறது. மாநில அரசுகள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா கூட்டத்தில் பேசும்போது, "ஆர்டிபிசிஆர் பரிசோதனை, விரைவு பரிசோதனை (ஆர்ஏடி) மூலம் ஒமைக்ரான் வைரஸை கண்டறியலாம். எனவே அனைத்து மாநில அரசுகளும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கண்டிப்பாக கரோனா பரிசோதனை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

கரோனா தடுப்பு விதிகள் நீட்டிப்பு

இதனிடையே இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் கரோனா தடுப்பு விதிமுறைகளை வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் பரவும் ஒமைக்ரான் வைரஸ் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை சார்பில் கடந்த 25-ம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிகள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்க வேண்டும். அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்.

வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களின் மாதிரிகளை இன்சாகாக் ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும். கரோனா தடுப்பு விதிகள் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை எவ்வித சமரசமும் இல்லாமல் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அந்த வைரஸ் இந்தியாவில் நுழைந்தால் 3-வது அலை ஏற் படும் என்று அஞ்சப்படுவதால் ஆரம்பத்திலேயே அந்த வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x