கர்நாடகாவில் மேலும் 33 மாணவர்களுக்கு கரோனா

கர்நாடகாவில் மேலும் 33 மாணவர்களுக்கு கரோனா
Updated on
1 min read

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் தார்வாட் மருத்துவக்கல்லூரி, மைசூரு நர்சிங் கல்லூரி, பெங் களூருவில் நர்சிங் கல்லூரி மற்றும் சர்வதேச உறைவிடப் பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதில் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஹாசன் மாவட்டம் குமரனஹள்ளியில் உள்ள மொரார்ஜி தேசாய் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, 26 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, சாம்ராஜ்நகரில் உள்ள மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 7 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7 பேரும் தனிமைப்படுத் தப்பட்டு, சாம்ராஜ்நகர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த 350 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட் டுள்ளது. அவர்களின் சோதனை முடிவுகள் வரும் வரை அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைக்கு ஊரடங்கு இல்லை

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் கரோனா வைரஸ் பாதிப்புஅதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''கர்நாடகாவில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவில் கூடும் அளவுக்கு கூட்டங்களை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரவல் வேகம் குறைவாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படாது. கரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு குழுவினர் தற்போதைய சூழலில் மீண்டும் ஊரடங்கு தேவை இல்லை என கூறியுள்ளனர்.

எனவே, தற்போதைக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படமாட்டாது. வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முறையாக சோதிக்கப்பட்டு, கரோனா தொற்று இல்லை என தெரியவந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in