

பெங்களூரு: பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் பிணவறையை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளிர்ப்பதன கிடங்கை பார்த்தபோது 2 சடலங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கரோனா தொற்றினால் உயிரிழந்த இரு நோயாளிகளின் சடலங்கள் தகனம் செய்யப்படாதது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் பிணவறையை ஆய்வு செய்தனர். அதில் சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்த துர்கா (40), கே.பி.அக்ரஹாராவைச் சேர்ந்த முனி ராஜு(35) ஆகிய இருவரின் சடலங்கள் என தெரியவந்தது. இதையடுத்து இருவரின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன.
அப்போது இரு நோயாளிகளின் உறவினர்களும், '16 மாதங்களுக்கு முன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உரிய நேரத்தில், தகனம் செய்யப்படாமல் குளிர்பதனக் கிடங்கில் மறந்து விடப்பட்டதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.
இதற்குக் காரணமானவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.