

டெல்லியில் மாநகராட்சி தேர்தல்சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஆம் ஆத்மிகட்சியை வீழ்த்த பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இங்கு மாநகராட்சிகளின் முக்கிய வாக்காளர்களாக குடிசைவாசிகள் கருதப்படுகின்றனர்.
இவர்களைக் கவர டெல்லி பாஜக சார்பில் நேற்று முன்தினம்,‘குடிசைவாசிகளை மதிக்கும் யாத்திரை’ நேரு நகரில் நடைபெற்றது. இதற்காக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் பெரிய பதாகைகளில் ‘மாதொரு பாதகன்’ நூல் மூலம் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் படம் இடம் பெற்று சர்ச்சையாகி விட்டது.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்ட இந்த யாத்திரையின் சுவரொட்டிகளில் அவருடன், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குமார் குப்தா, அப்பகுதி எம்.பி.யும் மத்திய இணை அமைச்சருமான மீனாட்சி லேக்கி ஆகியோரின் படம் பெரிதாக இருந்தது.
அதன் கீழே குடிசைவாசிகள் எனக் காட்ட இடம்பெற்ற ஒரு குடும்பத்தின் படத்தில் பெருமாள் முருகன் படமும் இருந்தது. டெல்லியின் குடிசைப் பகுதிகளில் அதிகமாக வாழும் தமிழர்களால் இப்படத்தில் இருப்பது பெருமாள் முருகன் எனக் கண்டறியப்பட்டது. எனினும் அது கடைசி நிமிடம் என்பதால் அதை மாற்றாமலே பாஜக தனது நிகழ்ச்சியை நடத்தியது சர்ச்சையாகி விட்டது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் டெல்லி பாஜக நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “இதுபோன்ற சுவரொட்டிகளை எங்கள் தகவல் தொழில்நுட்பக்குழு உருவாக்கியதும் மூத்த தலைவர்கள் அதை தேர்வு செய்வார்கள். இதில், அவசரம் கருதி இணையதளத்திலிருந்து எடுத்த படங்களில் பெருமாள் முருகனும் சேர்ந்து விட்டார். வரும் நாட்களில் இதில்மிகவும் எச்சரிக்கையாக இருக்கஅக்குழுவினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே, பாஜகவின் இந்தநிகழ்ச்சி குறித்து அதன் தலைவர்கள் பலரும் இதே சுவரொட்டியை தங்கள் ட்விட்டர், முகநூல் பக்கங்களில் பதிவேற்றம் செய்தனர். அவற்றில் இருந்த பெருமாள் முருகன் படம், சமூகவலைதளங்களிலும் வைரலாகி விமர்சனத்துக்கு உள்ளானது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாக மாநகராட்சி தேர்தல் கருதப்படுகிறது.